
-கவிதை: பி.ஆர். மகாதேவன் –
உன் போலி சமூக நீதிச் சேரிகளைவிட
எம் புண்ணிய சனாதனச் சேரிகள் மேலானவை
பாரம்பரியச் சேரிகள்
தொழில் குழுக்கள் சேர்ந்து வாழ்ந்த இடம்
நவீனச் சேரிகள்
முறை சாரா தொழிலாளர் சேர்ந்தும் வாழ முடியாத இடம்
சமூக நீதிச் சேரித் தொழிலாளர்களுக்கு
நிர்ணயித்த சம்பளம் கிடையாது
நிலையான வேலை கிடையாது
ஓய்வும் கிடையாது
ஓய்வூதியமும் கிடையாது
அகவிலைப்படி கிடையாது
ஆயுள் காப்பீடு கிடையாது
பயணப்படி கிடையாது
பஞ்சப் படி கிடையாது
மருத்துவ விடுப்பு கிடையாது
மகப்பேறு விடுப்பு கிடையாது
போனஸ் கிடையாது
இன்பச் சுற்றுலா அலவன்ஸ் கிடையாது
இன்று இங்கு அனைத்தையும் சுருட்டுபவன்
அரசியல் திராவிடன்
அரசாங்கத் திராவிடன்
பாரம்பரியச் சேரிகளில்
தேங்கி நாறும் குட்டைகள் கிடையாது
தொற்று நோய் பரப்பும் சாக்கடை கிடையாது
மலை போன்ற குப்பை கிடையாது
மாசடைந்த காற்று கிடையாது
அது தென்றல் தவழும் வயல் அருகில்
ஊரின் தொடக்கப் புள்ளியாக அமைந்திருக்கும்
சாணி மெழுகிய மண் வீடுகளில்
மாடப்பிறை அகல் ஒளிரும்
பாரம்பரியச் சேரியில்
படுத்துறங்க ஆல மரத்தடி உண்டு
வீட்டைச் சுற்றிச் சிறு தோட்டம் உண்டு
கூரையில் படரும் கொடிகள் உண்டு
குடும்பம் வளர்க்கும் பிராணிகள் உண்டு
நவீனச் சேரியில்
கால் நீட்டிப் படுக்க இடம் இல்லை
கழிவு நீர் செல்லக் கால்வாய் இல்லை
நல்ல புணர்ச்சிக்கொரு இடமில்லை
நாற்றமில்லாத வெளி இல்லை
நவீனச் சேரியில்
குலத்தொழில் இல்லை
ஆனால்,
பாரம்பரியச் சேரியில்
வேலையில்லாத் திண்டாட்டம் இல்லை
எந்த வேலையும் செய்யலாம் என்றாலும்
எல்லா நல்ல வேலையும் கிடைத்து விடாது
உன் பெண்ணைக் கட்டிக் கொடுத்துவிட்டுப் பேசு
அவன் பொண்ணைக் கட்டிக்கொடுக்கவில்லை என்பதை
நவீனச் சேரியில்
காசுக்கேற்ற கல்வி மையங்களே உண்டு
ஆனால்
பாரம்பரியச் சேரியில்
கூலிக்கு மாரடிக்கும் ஆசிரியர் கூட்டம் இல்லை
கேடட் கம்யூனிட்டிகளுக்குள்
நீதியரசர்களின் குடியிருப்புகளுக்குள்
காவலர் குடியிருப்புகளுக்குள்
எம்.எல்.ஏ. க்வாட்டர்ஸ்களுக்குள்
போட் ஹவுஸ் வீடுகளுக்குள்
அமிர் மஹால்களுக்குள்
யாரும் அவசியமின்றி நுழையாதது போலவே
தேவையில்லாத தெருக்களுக்குள் நாங்கள் நுழைந்ததில்லை
நுழைய விரும்பியதும் இல்லை
பாரம்பரியச் சேரியில்
பிற ஜாதி சாமிகளின் ஊர்வலம் நுழைந்ததில்லை
ஆனால்
எம் தெய்வங்கள்
சன்னதம் கொண்டாடத்தான் செய்தன அங்கு
நாங்கள் தோண்டிய கிணறுகள் வற்றும் காலங்களில்
நல்லோர் கிணறுகள் எங்கள் தாகம் தணித்தன
எந்தக் கோடையிலும் வற்றாது
எங்கள் வண்ணாரின் படித்துறையில்
எந்த முள்ளாலும் துளைக்க முடியாது
எங்கள் சக்கிலியரின் தோல் காலணியை
எந்த மழையும் அணைக்காது
எங்கள் வெட்டியாரின் விறகுகளை
எந்த பாரம்பரிய சேரிக்காரரும்
பீ அள்ளியதில்லை
எந்த பாரம்பரிய சேரிக்காரரும்
சாக்கடை சுத்தம் செய்ததில்லை
பாரம்பரிய சேரிக்காரருக்கு நிலம் சொந்தமில்லை
ஆனால்
ஒவ்வொரு போகக் கூலி
மறு போகம் வரை தாங்கும்
இன்றும் பயிர்க்கடன் வாங்கி
பட்டினி வேஷம் போடுவது
பட்டுமெத்தையில் படுத்துறங்கும்
பகுமானம் கெட்ட அ நீதிக் கட்சிப் பண்ணையார்களே
நிலவுடமைச் சமுதாயக் கொடுமையின் பேரில்
அண்ணல் வழங்கிய அரசியல் சாசனச் சலுகைகளை
இன்று
அனுபவிப்பதும்
ஆள்வதும்
அதே நில உடமை ஆதிக்க சமுதாயங்களே
இன்று என்னை சாக்கடை அள்ள வைப்பது
சமூக நீதி காத்துக் கிழிக்கும் நீ தானே
இன்று என்னை மருத்துவக் கழிவுகளை அள்ள வைப்பது
சமத்துவம் பேசி அலையும் நீ தானே
இன்று வரை எமக்குக் கழிப்பறை கட்டிக் கொடுக்காதது
சகோதரத்துவம் பேசித் திரியும் நீ தானே
விஞ்ஞானம் வளராத காலத்து வேதனைகளை
வீதி தோறும் முழங்கும் உன் வீட்டுச் சாக்கடைக்குள்
இன்றும் இறங்கும் என்னை
என்றேனும் கை தூக்கி விட்டதுண்டா நீ
நேற்றைய ஒடுக்குமுறையை நீ
மிகைப்படுத்திப் பட்டியலிடுவது
இன்று
நீ செய்யும் ஒடுக்குமுறையை மறைக்க மட்டும் தானே
அது சரி
ஒடுக்குமுறையை ஒழிப்பதா உன் இலக்கு
நானே ஒடுக்குவேன் என்பதுதானே உன் சமூக நீதி
ஒன்று மட்டும் நிச்சயம்
செருப்பு தூக்க ஒரு ஆள்
குடை பிடிக்க இன்னொரு ஆள்
ப்ளீச்சிங் பவுடர் தெளிக்க ஒருவன்
மேக்கப் போட ஒருவன்
என்ற உன் அல்லக்கை பரிவாரம் இல்லாமல்
இன்றைய சேரிக்குள் தனியாக நுழைந்துவிடாதே
உன் சமூக நீதி டோப்பா எகிறிவிடும் ஜாக்ரதை
*