பின்னலில் என்னையும் பின்னிவிட்டாயோ?

இலக்கியம் கவிதைகள்

OY2ROSE அழகாய்ப் பூத்துச் சிரிக்கும் ரோஜா! தோட்டத்தில் கண்டு ரசித்தேன் ஜோரா! ஆனால் நீயோ… வீதிக்கு வந்து விற்பனைக்கு விரித்திருக்கும் பூக்களை விலைகொடுத்து வாங்கி விரல் நுனியில் வைத்திருப்பாய்… தோட்டத்தில் ஆயிரம் பூத்திருந்தாலும் தோற்றத்தால் உன்னையே பாத்திருந்தேன்! தோன்றத்தான் ஆசையில் பா திறந்தேன்! எத்தனை எத்தனை ரோஜாக்கள்! எல்லாம் அழகாய்த்தான் சிரித்தன… ஆனாலும் தலைகனத்தால் மேல் நோக்கி இல்லாமல் தலைசாய்ந்து எனைப் பார்ப்பாய்… உன் அழகுப் பார்வையால்… உன்னையே நாடியதென் மனம்! உன்னைப் போன்ற பெண் என் பார்வையில் இதுவரை பட்டதில்லை! உன்னைத் தவிர எவரும் பெண்ணாய் என்னில் படவில்லை ! முதுகுத்தண்டு நிமிர்ந்திருக்கும் தலை மட்டும் சாய்ந்திருக்கும்! நிலம் நோக்கி உன் முகம் நீளும்! எனை நோக்கி உன் மனம் தாவும்! உன் விழி திரை சுருக்கி ஓரத்தில் விரிந்து எனை நோக்கும்! எல்லாம் அழகான காட்சிகள்..! இடுப்புக்கும் கீழே அசைந்தாடும் பின்னல்! சரிசமமாய்க் கத்திரித்து செதுக்கப்பட்ட புல்வெளியாய் பின்னல் நுனி! ஒருபிடி முன்னே கொத்தாய் கட்டிவிடப்பட்ட ரப்பர் பேண்ட் முடிச்சு! இரு தோள் வரை நீளும் மல்லிகைப் பந்தல்! எல்லாம் ரசனையின் உச்சம்! ஆனால் என் கன்னிப் பூவே… மூன்றாய்ப் பிரித்து ஒன்றாய்க் கட்டிய உன் கூந்தலின் பின்னலில்… முக்காலமும் உன்னையே ஓர்மையில் நினைத்திருக்கும் என்னையும் சேர்த்துக் கட்டிவிட்டாயே!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.