
- பத்மன்
காவிரித்தாயே பெருகி வா
கவலையெல்லாம் நீக்க வா
குடமுருட்டியாய் ஓடி வா
குற்றங்குறை போக்க வா (காவிரித் தாயே)
வெட்டாறாய் விரைந்து வா
வேண்டுகிற வரங்கள் தா
கொள்ளிடமாய் நிறைந்து வா
அள்ளியள்ளி வளங்கள் தா (காவிரித் தாயே)
காய்ந்துபோன நிலமெல்லாம்
களியாக நீரைத் தா
காயப்பட்ட மனங்களுக்கு
களிப்பூட்டும் வேரைத் தா (காவிரித் தாயே)
எல்லைதாண்டும் தொல்லைகளை
எதிர்த்துமோதி வெற்றி தா
நல்லதெல்லாம் துலங்கிடவே
நவநிதியாய் பெருகி வா (காவிரித் தாயே)
சித்திரா பௌர்ணமியில்
சிறப்பான பூசையிட்டோம்
இத்தரை மீதினிலே
எம்வாழ்வு செழிக்க வா (காவிரித் தாயே)
பத்மனிவன் பாடல்கேட்டு பலமடங்காய் பெருகி வா
பக்தர்களின் விருப்பமெல்லாம் பதமாக ஓங்க வா (காவிரித் தாயே)
(சித்ரா பௌர்ணமியான இன்று (12.05.25) மாலையில், ஸ்ரீ ரங்கம் அம்மா மண்டபத்தில் உலக சித்தர்கள் சர்வசமய கூட்டமைப்பு மற்றும் சிவனடியார்கள் சார்பில் நடைபெறும் காவிரி ஆர்த்தி மற்றும் கூட்டு வழிபாட்டுக்காக இயற்றப்பட்டது.)





