To Read it in other Indian languages…

Home இலக்கியம் கதைகள் சிறுகதை: புது ஸ்கூல்..!

சிறுகதை: புது ஸ்கூல்..!

sad boy thinking - Dhinasari Tamil

புது ஸ்கூல்
சிறுகதை : ஜெயஸ்ரீ எம்.சாரி

ஒன்பதாவது படிக்கும் ரிஷி தன்னுடைய தந்தை குருவின் வேலை மாற்றங்களினால் சிறு வயதிலிருந்தே பல பள்ளிகளில் படிக்குமாறு ஆனது.

மூன்றாண்டுக்கு ஒரு முறை புது பள்ளிக்கூடம், புது ஆசிரியர்கள், புது நண்பர்கள் என மனதில் ஏற்றுக் கொள்வான், ரிஷி. “ஸ்கூலுக்கு ஸ்கூல் தேர்ட் லாங்குவேஜூம், கேம்ஸ்களும் மாறுவதால தான் எனக்கு பெரிய பிரச்சனைகளாக இருக்கு,” என்று அவன் அங்காலாய்த்தான், தன் தாய் கிரிஜாவிடம்.

கிரிஜாவும் அதை ஒத்துக் கொண்டாள். சிபிஎஸ்சி வழியில் படிப்பதால் மாநிலங்களுக்கு ஏற்றவாறு ரிஷிக்கு மொழிகள் மாறுபடுவதால் ஏற்படும் சிரமமும், ஒரு ஸ்கூலில் கிரிக்கெட் விளையாடத் துவங்கி அதில் தன்னை ஒரு நல்ல ப்ளேயராக அடையாளம் காணும் சமயத்தில் குருவுக்கு மாற்றல் வந்து விடுகிறது. ரிஷிக்கோ புது ஸ்கூலில் ஹாக்கி விளையாட நேரும்.

தற்போதைய ஊரில் சென்ற வருடம் முழுவதும் ஆன்லைனில் படித்ததாலும், புது ஸ்கூல் பக்கமே போகவில்லை, ரிஷி. குருவுக்கு இந்த ஊரில் இரண்டாம் வருடம். ரிஷியின் பத்தாம் வகுப்பு முடிந்துதான் அடுத்த ஊருக்கு செல்ல வேண்டும் என்பதனால் கிரிஜாவுக்கு ஒரு சமாதானமாய் இருந்தது.

பல மாதங்களுக்குப் பிறகு ரிஷி புது ஸ்கூலுக்கு முதல் முறையாக இன்று செல்ல இருக்கிறான்.

“ரிஷி, இந்த வருஷம் ஸ்கூல் அக்டிவிடீஸ் எல்லாம் ஒழுங்காப் பண்ணனும். அதுவும் ஃபைனல் மார்க்கில் சேர்ப்பாங்களாம், பிரின்ஸிபல் சொன்னார்,” என்றாள் கிரிஜா. ” அம்மா, ப்ளீஸ், முதல் நாளே உன் லெக்சர் ஆரம்பிச்சுடாதே,” என்றதும் குருவும் மனதாலேயே சிரித்தான்.

பல மாதங்களுக்கு பின் ஸ்கூல் வந்த குழந்தைகளும் எல்லாரும் ஒரு உற்சாகத்துடனேயே இருந்தார்கள். தன் செக்‌ஷனைப் பார்த்து உட்கார்ந்தான், ரிஷி. ஆன்லைன் க்ளாஸிலும் நல்ல ரெஸ்பான்ஸ் கொடுத்துக் கொண்டிருந்ததாலும் ரிஷிக்கு சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நல்ல பரிச்சயமே இருந்தது.

நாட்கள் நகர்ந்தன.ஒருநாள் ரிஷியை அழைத்த ஆங்கில ஆசிரியை ” ரிஷி, நாளைக்கு ஃபீல்ட் ஒர்க் சர்வேக்காக பக்கத்தில் இருக்கிற கிராமத்தில் இருக்கிற கவர்மெண்ட் ஸ்கூலுக்கு போறோம்,” என்றார். வீட்டில் வந்து ரிஷி விஷயத்தைச் சொன்னவுடன், கிரிஜா ஸ்கூலுக்கே ஃபோன் செய்து, ” அந்தக் கிராமத்து ஸ்கூலில் எல்லாம் தற்போதைய சூழ்நிலைக்கேற்ப அரசாங்க விதிகள் எல்லாம் ஃபாலோ பண்ணுகிறார்களா?” என்று உறுதிப்படுத்திக் கொண்டாள்.

ரிஷியும் அடுத்த நாள் தன் ஆசிரியையுடன் அந்தப் பள்ளிக்கு சென்றான். செல்லும் வழிகளில் எல்லாம் ரிஷிக்கு பல அசௌகரியங்களை சகித்துக் கொள்ள வேண்டியதாய் இருந்தாலும் அரசுப் பள்ளியும் சுத்தமாய் தான் இருந்தது.

பரஸ்பர அறிமுகத்துக்குப் பிறகு, ஆசிரியையின் வழிகாட்டலின் பேரில் ரிஷி அவனை ஒத்த மாணவர்களிடம் கேள்விகளை கேட்கத் துவங்கினான். சிறிது நேரத்திற்கெல்லாம் தன் சர்வேயை முடித்து ரிஷி இல்லமும் வந்து சேர்ந்தான்.

கொஞ்சம் களைப்பாய் தெரிந்த ரிஷியிடம், கிரிஜா, ” கண்ணா, இன்னிக்கு உன் சர்வே எப்படி இருந்தது?” எனக் கேட்டவுடன், ரிஷி, கடகடவென்று பேசத் தொடங்கினான்.

” பலப் பசங்களுக்கு மொபைல் வாங்கவே ஆறு மாசம் ஆயிடுத்தாம். வேற விஷயங்களுக்காக பணம் வைத்திருந்த அவங்க அப்பா-அம்மாக்களுக்கு படிப்புக்காகவும் மொபைல் வேணும்ங்கறதே புரிவதற்கு நிறைய மாதங்கள் ஆயிடுத்தாம். சில பசங்க அவங்க ஃரெண்ட்ஸ் வீட்டுல போய் படிச்சாங்களாம். நெட்வொர்க் ப்ராப்ளம், கரண்ட் கட் ப்ராப்ளம்னு வேற இருந்ததாம்.. சில நேரத்தில டீச்சரே பசங்க வீட்டுக்கு போனாங்களாம். பாவம்மா, அந்தப் பசங்கள். குட்டிப் பசங்கள் எல்லாம் ஸ்கூல் புக் எடுத்தே ஒன்றரை வருஷமாயிடுத்தாம். சீக்கிரம் இந்த சிசுவேஷன் மாறணும். எல்லோருக்கும் படிப்பு கிடைக்கணும். ரொம்ப ஏழைப் பசங்களுக்கு எல்லாம் மதிய வேளை சாப்பாடு கிடைப்பதற்காகவாது ரெகுலர் ஸ்கூல் திறக்கணும்னு ஒரு டீச்சர் சொன்னப் போது ரொம்ப மனசு கஷ்டமாயிடுத்து, அம்மா,” என்ற ரிஷியை கிரிஜா, ” சீக்கரம் சரியாகி விடும்பா, நம்ம எல்லோரும் நல்லதே நினைப்போம்,” என்று அவனுக்கு ஆறுதல் கூறினாள்.

தற்போதைய நிதர்சனத்தை அறிய, புரிய வைத்த இந்தப் புது ஸ்கூலானது ரிஷியின் வாழ்வில் மறக்க முடியாத இடத்தில் இருக்கும் என்றும், இனி போகப் போகும் புது பள்ளிக்கூடங்களிலும் அவனுக்கு ஒரு பிரச்சனையாய் இருக்காது என்று அவள் நம்பினாள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

7 − one =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.