கொரோனா: முதியவர்கள், கர்ப்பிணிகளை கண்காணிக்க புதிய செயலி!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் சென்னை
app

சென்னையில் கருவுற்ற பெண்கள் மற்றும் 60 வயதினரை கண்காணிக்க மாநகராட்சியும், தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளன.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் 33 ஆயிரம் பேர் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக கள பணியில் ஈடுபடும் 11 ஆயிரத்து 500 பேர் வீடு வீடாக சென்று மக்களின் உடல்நிலை குறித்து தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இந்நிலையில் சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து புதிய முயற்சியாக கொரோனா கண்காணிப்பு செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

கருவுற்ற பெண்கள் மற்றும் 60 வயதிற்கு மேல் உள்ளவர்களின் உடல்நிலை குறித்தும், அவர்களுக்கு சர்க்கரை வியாதி, ரத்த கொதிப்பு போன்றவை இருக்கின்றனவா? என்பது குறித்தும் தகவல்களை சேகரித்து அந்த செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் முதியவர்கள் மற்றும் கருவுற்ற பெண்கள் உள்ள வீட்டில் அனைவரின் தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை சுமார் 3 லட்சத்து 47 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இச்செயலி மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வீடியோ கால் மூலமும், மின்னஞ்சல் மூலமாகவும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் மக்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனை ஏற்பட்டால் அவர்களை கண்காணிக்க வார்டு வாரியாக புதிதாக 640 மருத்துவ முகாம்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதாகவும், தகவல் தெரிவித்தால் மருத்துவர்கள் உடனே நேரில் சென்று சிகிச்சை அளிக்க இந்த செயலி உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து உருவாகியுள்ள இந்த புதிய செயலியை நடைமுறை படுத்துவதன் மூலம் 60 வயதிற்கு மேற்பட்டோர்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பாற்ற முடியும் என்று பெரும் நம்பிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.