
நாட்டின் சுதந்திரப்போராட்ட வரலாற்றில் தனியிடம் பெற்றது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தைக் கலங்கடித்த, நெல்லை துணை ஆட்சியர் ஆஷ் கொலை வழக்கு. செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் என்ற இளைஞன், 1911 ஜூன் 17ம் தேதி மணியாச்சி ரயில் நிலையத்தில் வைத்து, ஆஷ் துரையை சுட்டுக் கொன்றான்.
காரணம், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ஆஷ் இழைத்த கொடுமைகளும், செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு ஆஷ் செய்த கொடுமைகளும்தான்! அதற்குப் பழிவாங்க பாரத மாதா சங்கத்தை சேர்ந்த வாஞ்சி உள்ளிட்ட இளைஞர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்டு, ஆயுத புரட்சியால் நெல்லை மண்ணில் சுதந்திரப் போராட்டத்தை நடத்த திட்டம் தீட்டி செயல்பட்டனர்.
ஆஷ் சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர், தன்னை ஆங்கிலேயர்கள் பிடித்து, அதன் மூலம் தன் இயக்கத்தவரைக் காட்டிக் கொடுத்துவிடும் படி ஆகி விடக் கூடாது என்பதற்காக, தன்னைத்தானே சுட்டு தற்கொலையும் செய்து கொண்டான் வாஞ்சிநாதன். அவனது வீரத்தைப் போற்றும் வகையில், செங்கோட்டையில் ஒரு சிலையும் மணிமண்டபமும் அமைக்கப் பட்டிருக்கிறது.

அதே போல், ஆஷ் உடலை கிறிஸ்துவ மிஷனரியினர், தாங்கள் நடத்தி வரும் பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி அருகே, இங்க்லீஷ் சர்ச் கல்லறையில் புதைத்தனர். கிறிஸ்துவ மதம் பரப்ப வந்த மிஷனரிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, ஆட்சி செய்து வந்த ஆஷ்க்காக, மிஷனரிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றன. தற்போதும், மிஷனரிகளின் பின்னணியில் இயங்கும் சிலர் அரசியலுக்காக ஆஷ் சமாதியில் மலர் தூவும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து நெல்லை மாவட்ட வி.எச்.பி., அமைப்பினர் கூறியபோது….
பாரத நாட்டில் அடிமைபடுத்தி மக்களை சுட்டுகொன்ற ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரை என்கிற கிறிஸ்துவனுக்கு பாளையங்கோட்டை ஜான்ஸ் கல்லூரி அருகே இங்கிலிஸ் சர்ச் கல்லறையில் உள்ள இடத்தில் வருடம் வருடம் மலர் அஞ்சலி செலுத்துக்கின்றனர் சில லெட்டர்பேடு அமைப்புகள். இந்த வருடமும் ஆங்கிலேனுக்கு அஞ்சலி செலுத்த போவதாக தகவல் வந்தது.
இதற்கு எந்த வகையில் வருடம் வருடம் அனுமதி அளிக்கிறது, நெல்லை மாவட்ட அரசு நிர்வாகம் ? ஆங்கிலேயர்களின் கைபாவையாகவும், சுதந்திர வீரர்களின் உயிர்தியாகத்தை கொச்சைப் படுத்துகிறதா இந்த அரசு ?
பொதுமக்களை சுட்டுக் கொன்ற ஆங்கிலேயனுக்கு அஞ்சலி செலுத்தும் தேசதுரோகிகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தது இதுவரை ?
இந்தியாவிலே வேறு எங்கும் சுதந்திரம் அடைந்த பிறகு, அடிமைப்படுத்திக் கொன்ற கிறிஸ்துவ ஆங்கிலேனுக்கு அஞ்சலி செலுத்துவது இல்லை, இங்கே நெல்லையில் மட்டுமே இந்த தேசதுரோகசெயல் வருடம் வருடம் நடக்கிறது !
இந்த வருடமும் இந்த தேசதுரோக செயலுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்குமேயானால் நெல்லை விசுவ ஹிந்து பரிஷத் சார்பாக சுதந்திரப்போராட்ட வீரர் வாஞ்சிநாதன் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், ஆஷ் சமாதிக்கு அஞ்சலி செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக, ஜூன் 17, புதன்கிழமை காலை 10 மணிக்கு ஜான்ஸ் கல்லூரியில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் செய்வோம் என்று அறிவித்தனர்.
இதனிடையே, வழக்கம் போல் இந்த வருடமும் ஆங்கிலேயன் ஆஷ் துரைக்கு சில கிறிஸ்துவ மிஷனரிகளின் பின்னணியில் இயங்கும் தமிழர் அமைப்புகள் அஞ்சலி செலுத்த திட்டமிட்டிருந்தன. ஆனால் கொரோனா அச்சத்தை சுட்டிக்காட்டி, மாவட்ட நிர்வாகம் அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

ஆனால், இன்று காலை அனுமதி மறுப்பையும் மீறி, சிலர் அந்தப் பகுதிக்கு பேனர்களுடன் வந்தனர். அவர்களை போலீசார் கண்டுகொள்ளவில்லை. கறுப்புச் சட்டை அணிந்து வந்த அவர்கள் ஆஷ் சமாதிக்குச் சென்று மலர் தூவி கோஷம் எழுப்பி, பேனர்களை விரித்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர்.
இதனைக் கண்டித்து வி.எச்.பி., அமைப்பினர் கேள்வி கேட்ட போது, போலீஸார், ஒப்புக்கு அவர்களைக் கைது செய்வதாகக் கூறி, மலர் அஞ்சலி நிகழ்ச்சி எல்லாம் முடிந்த பிறகு அழைத்து சென்றனர். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வந்தவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர் போலீஸார்.
அதே நேரம், செங்கோட்டை போலீசார் நேற்று மாலை வாஞ்சிநாதன் நினைவு தினத்தை முன்னிட்டு அனைத்து கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அந்தக் கூட்டத்தில் அரசியல் கட்சியினர் எவருக்கும் கொரோனா தொற்று நோய்ப் பரவல் காரணமாக வாஞ்சி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு அனுமதி அளிக்கப் போவதில்லை என்று தெரிவித்திருந்தனர்!
அதன்படி, செங்கோட்டை நகரில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். அரசின் சார்பில் மரியாதை செலுத்த மாவட்ட ஆட்சியர் வந்தார். தமிழக அரசின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள வாஞ்சிநாதன் நினைவு மண்டபத்தில் உள்ள வாஞ்சிநாதனின் மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் மாவட்ட ஆட்சியர். பிறகு செங்கோட்டை பேருந்து நிலையத்தின் எதிரே அமைந்துள்ள வாஞ்சிநாதன் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது!
அதே நேரம், கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக மற்ற அரசியல் கட்சியினர், அமைப்புகள், தனிநபர்கள் ஆகிய எவருக்கும் மாலை அணிவிக்கும் நிகழ்வுக்கு போலீஸார் அனுமதி அளிக்கவில்லை.