டிக்டாக் பழக்கம்: திடீரென்று மாயமான 16 வயது சிறுமி!

சற்றுமுன்
tik tok

வேலூரை அடுத்த கீழ்மொணவூர் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு முடித்துவிட்டு வேலூரில் உள்ள திருமண அழைப்பிதழ் கடையில் வேலை செய்துவந்தார்.

இந்தச் சிறுமிக்கு பெற்றோர் ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளனர். அதில், `டிக்டாக்’ செயலியைப் பதிவிறக்கம் செய்த சிறுமி தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டுள்ளார். பலரது வீடியோக்களையும் லைக், ஷேர், கமென்ட் செய்துள்ளார்.

இந்த நிலையில், அப்பு என்ற பெயரில் வீடியோக்களைப் பதிவிட்டு வந்த அறிமுகமில்லாத இளைஞருடன் சிறுமிக்கு டிக்டாக்கில் நட்பு ஏற்பட்டது. இருவரும் டிக்டாக் செயலியில் மெசேஜ் மூலம் பேச ஆரம்பித்தபோது, சிறுமியை டிக்டாக் இளைஞர் காதல் வலையில் வீழ்த்தியதாகக் கூறப்படுகிறது.

கடந்த 12-ம் தேதி, ஆவாரம்பாளையத்தில் உள்ள தோழியின் வீட்டுக்குச் செல்வதாக தாயிடம் கூறிவிட்டுச் சென்ற அந்தச் சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.

மூன்று நாள்களாகத் தேடியும் மகள் கிடைக்காததால், அதிர்ச்சிக்குள்ளான தாய் விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரில்,`தன் மகள் செல்போனும் கையுமாகத்தான் எப்போதும் சுற்றுவாள். டிக்டாக்’ அவளது பொழுது போக்கு என்று நினைத்தோம். அதில் அறிமுகமான நபரைத் தேடிச் சென்றுவிட்டாள்’’ என்று கூறியுள்ளார்.

போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியைத் தேடி வருகிறார்கள். இது தொடர்பாக போலீஸாரிடம் கேட்டதற்கு, `சிறுமியுடன் பழகியதாகக் கூறப்படும் இளைஞரின் டிக்டாக் ஐ.டி-யை சைபர் க்ரைமில் கொடுத்துள்ளோம். இளைஞரின் முகவரி கிடைத்தவுடன் அவரைத் தேடிச் செல்ல உள்ளோம். டிக்டாக் காதலனுடன் சிறுமி இருப்பது தெரிய வந்தால், அந்த நபர் மீது போக்ஸோ’ சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்போம்’’ என்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.