
வைசாக மாதம் பரம பவித்ரமான மாதம். திதிகளில் சுத்த பஞ்சமி மிகவும் சிறப்பானது. அப்படிப்பட்ட புண்ணிய திதியில் சாட்சாத் பரமேஸ்வர சொரூபமான ஆதிசங்கர பகவத்பாதர் அவதரித்தார். அதனால் இந்நாளை சங்கர ஜெயந்தி என்கிறோம். இந்த திதியில் ஜகத்குருவை வழிபடுவது என்பது ஞானத்தையும் குருபரம்பரையும் வழிபடுவதற்குச் சமமாகும்.
ஆதிசங்கரருடனே குரு பரம்பரை ஆரம்பமாகவில்லை. “நாராயண சமாரம்பாம்…” என்று கூறுவது போல் ஆதிநாராயணனிடமிருந்து ஆரம்பமானது. பகவானே முதல் குரு. அவரிடமிருந்து பிரம்ம வித்யை பிரம்மதேவருக்குக் கிடைத்தது. பிரம்ம தேவரிடமிருந்து வசிஷ்டர் முதலான மகரிஷிகள் பெற்றார்கள். அது கிரமமாக நமக்கு வியாச மகரிஷியிடமிருந்து கிடைத்தது. வியாசரிடமிருந்து வரிசையாக சுக யோகீந்திரர், கௌட பகவத்பாதர், கோவிந்த பகவத் பாதர், ஆதிசங்கர பகவத்பாதர் என்று தொடர்ச்சியாக பிரம்ம வித்யை நமக்குக் கிடைக்கிறது.
அனேக புராணங்களும் தந்திர சாஸ்திரங்களும் ஆதிசங்கரர் சாட்சாத் சிவ அவதாரம் என்று கூறியுள்ளன. உலகத்தில் தளர்வு ஏற்பட்ட போது இறைவன் இரண்டு உருவங்களில் வருவானாம். ஒன்று அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டக்கூடிய வீர, சூர அவதாரங்கள். இரண்டாவது மனிதனில் இருக்கும் அஞ்ஞானத்தையும், அதர்மப் பழக்கங்களையும், தாமஸ புத்தியையும் நீக்கி ஞானத்தையும் தர்மத்தையும் போதித்து அமைதி ஏற்படுத்தும் ஆச்சாரிய அவதாரங்கள். அப்படிப்பட்ட ஆச்சாரிய அவதாரமே ஆதி சங்கரரின் அவதாரம்.
ஆதிசங்கரருடைய வாழ்க்கையைப் பார்த்தாலே அவர் ஒரு அவதாரம் என்று அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் பிறக்கும் போதே அற்புதமான ஜனனமாகப் பிறந்தார். ஆறு வயதிலேயே சர்வ சாஸ்திரங்களையும் அத்யயனம் செய்தார். அவர் தன் ஆறாவது வயதில் அருளிய கனகதாரா ஸ்தோத்திரம் ஒரு தவறு கூட இல்லாத அக்ஷரப் பெட்டகம். அதோடு கூட அதில் ஸ்ரீசக்கர ரகசியங்களும் அநேக மந்திரங்களும் பொதிந்துள்ளன. மேலும் அபரிமிதமான காருண்யத்தோடு ஆறு வயதிலேயே தன் ஸ்தோத்திரத்தால் ஒரு ஏழை பெண்மணியின் தரித்திரத்தை போக்கிய மகானுபாவர் அவர்.
அதனால்தான் ஆதிசங்கரரை, “ஆலயம் கருணாலயம்” என்றார்கள். கருணைக்கு நிலையம் அவர். மேலும், “ஸ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்” என்று சிறப்பாக போற்றப்படுகிறார். ஏனென்றால் சர்வ தர்மத்திற்கும் ஞானத்திற்கும் ஆதாரம் வேதம். வேதத்தில் கூறியவற்றை வெளிப்படுத்துபவை ஸ்மிருதிகளும் புராணங்களும். இம்மூன்றின் சாரத்தையும் நமக்கு அளித்த ஆதிசங்கரரே உண்மையான ஜகத்குரு! உலகம் அனைத்திற்கும் பயன்படும் ஞானத்தை அளிப்பவர் ஜகத்குரு.
ஆதி சங்கர பகவத்பாதர் அவதரித்த நேரத்தில் மொத்த தேசத்தின் நிலை எவ்வாறு இருந்தது என்று பார்க்கவேண்டும்.
வேதவியாசர் வேதமனைத்தையும் நான்கு பாகங்களாக்கி, மகாபாரதம், புராணங்கள் முதலியவற்றை எழுதி விஸ்தாரமான ஞானத்தை நமக்கு அளித்துள்ளார். மனிதன் உய்வடைவதற்கு அனைத்து வித மார்க்கங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தார். கர்ம, ஞான, உபாசனா மார்க்கங்களை பலப்படுத்தி அளித்தார். மேலும் யார் எந்த தெய்வத்தை உபாசனை செய்ய நினைத்தாலும் அவர்களை உய்விக்கும் வண்ணம் சிறப்பாக புராணங்களைப் படைத்தார். உபாசிக்கப்படுவது ஒரே பரப்பிரம்மமாக இருந்தாலும், உபாசனை மார்க்கத்தின் மூலம் சித்தத்தை ஒருமிக்கச் செய்து “சர்வம் பிரம்ம மயம்” என்ற ஞானத்தை பெற வேண்டும் என்பதற்காக ஆதிசங்கரருக்கு முன்பாகவே வேதவியாசர் சனாதன தர்மத்தை நிலை நிறுத்தியிருந்தார்.
அப்படிப்பட்ட சனாதன தர்மத்தில் கலியுகம் ஆரம்பமான பின் பலவித தளர்வுகள் உண்டாயின. ஒருபுறம் வேதத்திற்குப் புறம்பான புத்தி மானுடனுக்குள் பிரவேசித்து சிறிது சிறிதாக யக்ஞ கலாச்சாரம் நாசமானது. யக்ஞம் அழிவடைந்தால் தர்மம் அடிபட்டுப்போகும். அதற்குத் துணையாக பிரம்ம வித்யை கூட தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தர்மபிரஷ்டம் ஏற்பட்டது. அப்படிப்பட்ட பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. எழுபத்திரண்டு வித துர் மதங்கள் ஏற்பட்டன. வேதத்திற்குப் புறம்பான மதங்கள் சில என்றால், வேதத்தில் இருக்கும் பாகங்களை ஏற்றபடியே பரஸ்பர வேற்றுமைகளோடும் வெறுப்புகளோடும் சண்டையிட்டுக்கொள்ளும் வேறு சில மதப் பிரிவுகள் உண்டாயின. சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் என்ற ஆறு பிரிவுகளாக வேத தர்மம் பிரிந்துபோனது. அவரவர் தம் மதப்பிரிவே உயர்ந்ததென்று கூறி இதர சித்தாந்தங்களை ஏளனம் செய்து பரஸ்பர விரோதத்தோடு சண்டையிலும் சச்சரவிலும் ஈடுபட்டு ஒருவித கலகச் சூழலை ஏற்படுத்தியிருந்தார்கள். பரமார்த்தத்தை மறந்து வெறும் செயற்கையான வழிபாட்டில் இறங்கி அவற்றில் பல வித ராஜச தாமஸ பாவனைகளைப் புகுத்தி வேதத்திற்குப் புறம்பான தாந்திரீக வழிமுறைகளை வியாபிக்கச் செய்தார்கள். ஒரே வைணவத்தில் பல பிரிவுகள். ஒரே சைவத்தில் பல பிரிவுகள்.
இவ்வாறு ஒவ்வொருவரும் நிரந்தரம் கலகத்தில் ஈடுபட்டார்கள். ஆன்மீக சாதனையில் ஈடுபடாமல் பரமார்த்தத்தை மறந்தார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் தேசம் வேற்றுமைகளால் சிதைந்து போயிருந்த நிலையில் தர்மத்தை காப்பதற்கு சாக்ஷாத் பரமேஸ்வரனே ஆதிசங்கரராக வைகாச சுத்த பஞ்சமியன்று அவதரித்தார்.
இந்த மகா காரியத்திற்காகவே பிறந்தாற்போல மிக பால்யத்திலிருந்தே அவர் சர்வ வித்யைகளையும் வெளிப்படுத்தியதோடு தனது எட்டாவது வயதிலேயே வீட்டைத் துறந்து மாத்ரு சன்யாசத்தை சுவீகரித்து, பின்னர் கோவிந்த பகவத்பாதரிடம் சம்பிரதாயமாக சந்நியாச ஆசிரமத்தை ஸ்வீகரித்தார். ஆச்சாரிய சம்பிரதாயத்தை அனுசரித்து மொத்தம் இமயம் முதல் குமரி வரை யோக சக்தியால் மூன்று முறை சுற்றி வந்தார்.
நூல்களை எழுதியதோடு நிற்காமல் ஞானத்தைப் போதித்தார். அன்றைய மேதாவிகளை தன் வாதிக்கும் திறனால் உண்மையை அங்கீகரித்து ஏற்கும்படிச் செய்தார். அத்வைத சித்தாந்தத்தை கவனத்தில் இருத்தி பிற கொள்கைகளை சிறிதும் ஏளனம் செய்யாமல் சித்தாந்தங்களுக்கு இலட்சியமான வேதாந்தத்தின் பரமார்த்தத்தை பிரதிஷ்டை செய்தார். ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்தது உபநிஷத்து மதம். வேதாந்த மதம். வேதாந்த மதத்தை வேதமே ‘அத்வைதம்’ என்று கூறுகிறது.
அத்வைதமே வேதத்தின் ஹிருதயம். பரப்பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று இல்லை. அதுதான் அத்வைதம். பரப்பிரம்மத்தைத் தவிர வேறு ஒன்று இருப்பதாகத் தென்படுவது பிரமை. அந்த பிரமையை விடுத்து அமைதியை பெறுவாயாக! இதுவே ஆதி சங்கரர் நிரூபித்த அத்வைத சித்தாந்தம். ஆனால் அதனை அத்தனை எளிதாக அடைய முடியாதாகையால் முதலில் சித்த சுத்திக்காக சாஸ்திரம் கூறிய நற்செயல்களைச் செய்ய வேண்டும். இரண்டாவது இறைவனைச் சரணடைந்து உபாசனையால் சித்தத்தை ஒருமிக்கச் செய்யவேண்டும். சித்த சுத்தியும் ஏகாக்ர நிலையும் கிடைத்துவிட்டால் பிரம்மஞானம் எளிதாக வந்து சேரும். இது ஆதிசங்கரர் விளக்கிக் கூறிய சனாதன தர்மத்தின் சாராம்சம்.
இதனையே ஜகத்குரு அற்புதமான நூல்களில் வெளியிட்டார். அதனால்தான் நம் நாட்டிலும் வெளிநாட்டிலும் எத்தனையோ பேர் ஆதிசங்கரரின் கொள்கையை வணங்கி ஏற்கிறார்கள். ஏனென்றால் ஆதிசங்கரர் புதிய மதத்தை உருவாக்கவில்லை. அனைத்து மதங்களுக்குமான பரமார்த்தத்தை நிரூபித்தார். அதுவே ஆதிசங்கரர் செய்த உயர்ந்த செயல். அதனால்தான் அவரை “சமன்வய கர்த்தா” என்று போற்றுகிறோம்.
யார் எந்த மதத்தில் இருந்தாலும் அவருடைய மதத்தில் இருந்து வெளியே வராமலேயே ஆதிசங்கரரின் தத்துவத்தை கௌரவித்து வாழலாம். பரமார்த்ததை அடையலாம். இதுவே அவர் செய்த உயர்ந்த உபதேசம். அதனால்தான் சங்கரர் ‘தத்துவசீலர்’ என்று போற்றப் படுகிறார்.
சங்கரரின் நூல்களைப் படித்துப் பார்த்தால் அவருடைய மேதஸ்ஸு புரியும். அதன் உயர்வுக்கும் சிறப்புக்கும் அந்த மேதஸ்ஸுக்கும் நாம் தலை வணங்குவோம். முப்பத்திரண்டு வயதிற்குள் அத்தனை மகா செயல்களைச் செய்துள்ளார். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் நினைவில் நிற்கும்படி செய்துள்ளார். உயர்ந்த பிறவி என்றால் அவருடையதே! சிவனுடைய அவதாரம் ஆதலால்தான் இப்பொழுதும் நினைவில் நிற்கிறார். அவதார புருஷர் மட்டுமே அத்தகைய உயர்ந்த செயல்களை செய்ய வல்லவர்.
ஒருபுறம் பிரஸ்தானத்திரயத்திற்கு பாஷ்யம் எழுதினார். அதாவது தசோபநிஷத்துகளுக்கும், பிரம்ம சூத்திரத்திற்கும், பகவத் கீதைக்கும் பாஷ்யம் எழுதினார். அந்த பாஷ்ய கிரந்தங்களை மென்மையான, சரளமான, மதுரமான நடையில் எழுதியுள்ளார். அவற்றில் ஆழமான ஞானத்தின் அம்சங்கள் இருப்பதால் அதனைத் தெளிவாக கொடுப்பதற்காக ஏக ஸ்லோகி முதல் சஹஸ்ர ஸ்லோகி வரை அநேக கிரந்தங்களை இயற்றினார். விவேக சூடாமணி, தத்துவ போதா போன்ற பல நூல்களைப் படைத்தார்.
சௌந்தரிய லஹரி, சிவானந்தலஹரி முதல் பலப்பல ஸ்தோத்திர சாஹித்யங்களைப் படைத்தருளியுள்ளார். இன்னொருபுறம் கேள்வி பதில் வடிவில் பிரச்னோத்திர மாலிகா என்ற பெயரில் ஜீவன பரமார்த்தத்தை எழுதியுள்ளார். இத்தனை விஸ்தாரமான சாகித்யங்களை படைத்துள்ளார்.
இவை அனைத்தும் ஒரு புறம். மறுபுறம் ஆதிசங்கரரின் நிர்வாகத் திறமை. அது அத்தனை சிறந்ததாக விளங்கியது. தர்மத்தை பிரதிஷ்டை செய்வதற்கு போதனை செய்வது ஒரு வழிமுறை. நூல்களைப் படைப்பது ஒரு வழிமுறை. அதோடு நிற்காமல் பாரத தேசத்தின் நான்கு திசைகளிலும் நான்கு பீடங்களை ஏற்படுத்தினார்.
பாரத தேசத்தின் பலப்பல தலங்களை தரிசித்து அந்த க்ஷேத்திர தேவதைகளை வணங்கி சாதனை புரிந்து அங்கு சாத்வீகமான உபாசனை வழிமுறையை ஏற்படுத்தி வியாபிக்கச் செய்தார். அதனால் சங்கரரின் பாத ஸ்பரிசத்தாலும் வழிபாட்டாலும் க்ஷேத்திரங்கள் மீண்டும் புதிய சக்தியைப் பெற்று உயிர்த்தெழுந்தன. இமயம் முதல் குமரி வரை சங்கரர் வழிபட்ட தலங்கள் எத்தனையெத்தனையோ! ஸ்ரீசைலம் சென்று அங்கு பிரமராம்பிகா சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமியை வழிபட்டு சிவானந்தலஹரி எழுதினார். சிதம்பரம் சென்று சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடேஸ்வரனை தரிசித்து சௌந்தர்யலஹரி எழுதினார். இன்னும் மூகாம்பிகா தேவியை தரிசித்து சதுஷ்ஷஷ்டி உபசார பூஜை என்னும் ஸ்தோத்திரத்தைப் படைத்தார்.
நான்கு பீடங்களை அமைத்து ஒரு அற்புதமான குரு பரம்பரையை ஏற்படுத்தினார். சங்கரரின் தவச்சக்தி எத்தகையது என்றால் இப்போதும் ஆதிசங்கரர் போன்றவர்களே அந்தப் பரம்பரையில் குருமார்களாக நமக்குக் கிடைத்துள்ளார்கள். அது ஒரு உயர்ந்த பாக்கியம். சங்கருக்குப் பிறகு வந்த வித்யாரண்ய சுவாமிகள் போன்றவர்கள் எல்லோரும் பாரதீய கலாச்சாரத்தை புனருத்தாரணம் செய்தவர்களே!
சர்வ வைதீக மார்க்கங்களையும் சமன்வயம் செய்த ஆதிசங்கர ஜகத்குருவிற்கு வந்தனம்!
தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்



