ஒற்றை ஓட்டில் ஊசலாடும் அரசு: நம்பிக்கை வாக்கெடுப்பு வந்தால் ஆட்சி தப்புமா?

Published:

edappadi dinakaran panneerselvam - 2026

சென்னை:

மத்தியில் வாஜ்பாய் அரசில் அங்கம் வகித்தார் ஜெயலலிதா. அப்போது அவர் மீது ஊழல் வழக்குகள் தலை மீதான கத்தியாக தொங்கிக் கொண்டிருந்தன. அதில் இருந்து விடுபட மத்திய அரசின் உதவியை நாடினார் ஜெயலலிதா. ஆனால் ஒன்றும் நடக்கவில்லை. கோபத்தில் ஒரு டீ பார்ட்டி வைத்தார். காங்கிரஸுடன் கை கோர்த்தார். மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் ஒற்றை ஒட்டில் அரசு கவிழ்வதற்கு அதிமுக.,வின் ஜெயலலிதா காரணமாக இருந்தார். இது அப்போது பரபரப்புடன் பேசப் பட்டது.

இப்போது அதே போன்றதொரு நிலைமை, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப் பட்டு வளர்க்கப் பட்ட அதிமுக.,வுக்கும் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா இல்லாத நிலையில், ஜெயலலிதா செய்த அதே போன்றதொரு துரோகத்தை இப்போது அவரது கட்சிக்கு அவரது கட்சிக் காரர்களே செய்யத் துணிந்து விட்டார்கள். அதிமுக.,வைக் கைப்பற்றியே தீருவது, ஆட்சியில் தங்களின் ஆட்சியை நிலைநாட்டியே தீருவது என்று கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கும் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள், முன்னர் அதிமுக.,வில் இருந்து முறைகேடுப் புகார்கள் வந்த காரணத்தால் துரத்தியடிக்கப் பட்டார்கள். அவ்வாறு துரத்தப் பட்டவர்களில் சசிகலாவும் ஒருவர். பின்னாளில், அரசியலில் ஈடுபட மாட்டேன் என்ற உறுதிமொழியுடன் அவரை தனது வீட்டுக்குள் அனுமதித்தார் ஜெயலலிதா. ஆனால் சொல்லி வைத்தது போல், ஆட்சிக்கு வந்த 3 மாதங்களுக்குள் ஜெயலலிதா உடல் நலக் குறைவு கண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட, நன்றாகத் தேறி வருகிறார் என்று மருத்துவமனையால் ஒவ்வொரு நிமிடமும் உறுதிப் படுத்தப் பட்ட நிலையில் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மர்மமான முறையில் மரணம் அடைந்தார் ஜெயலலிதா.

இந்நிலையில்தான் சசிகலாவின் குடும்ப உறுப்பினர்கள் கட்சிக்குள் மீண்டும் வந்து ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினர். சசிகலாவின் கூட்டாளிகளாக இருந்தும் ஓ பன்னீர் செல்வம் திடீரெனப் பொங்கி எழ, கட்சி பிளவு கண்டது. கூவத்தூரில் மீதமுள்ளவர்களை அடைத்துவைத்து, தாமே முதல்வராக வர முயன்று முடியாத நிலையில் எடப்பாடி தலைமையில் ஆட்சியை அமைத்தார் சசிகலா. இந்நிலையில் சிறைக்குச் சென்றுவிட்ட சசிகலாவுக்கு பதிலாக தினகரன் கட்சி அரசியலைத் தொடர்ந்து நடத்தி வர, மேலும் ஒரு பிளவு கண்டது அதிமுக.,

ALSO READ:  சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

இதனிடையே பிரிந்து நின்ற அதிமுக.,வின் இரு அணிகளும் இணைந்தன. எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கை கோத்துவிட, தினகரன் விழி பிதுங்கி நின்றார். ஆனால், இரு அணிகளும் சேர்ந்துவிட்ட பின்னர், தினகரன், சசிகலா என அனைவரையும் வெளியேற்ற நடவடிக்கை எடுப்பதாக அறிவிக்க, மீண்டும் ஒரு பிளவு நாடகம் அதிமுக.,வில் அரங்கேறியது. தற்போது தினகரனுக்கு ஆதரவாக 19 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இன்று காலை ஆளுநரைப் பார்த்து, எடப்பாடி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவதாகக் கூறினர். இதனால் ஆளும் அரசுக்கான பெரும்பான்மை பலம் தற்போது குறைந்துவிட்டது.

இதைத்தான் திமுக.,வும் எதிர்பார்த்துள்ளது. இதை அடுத்து திமுக, தரப்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி பெரும்பான்மை பலத்தை ஆளும் அரசு நிரூபிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி காய் நகர்த்தத் துவங்கியுள்ளது. இதனால் ஆட்சிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

சட்டமன்றத்தில் அதிமுகவுக்கு 135 பேர் பலம் உள்ளது. அவர்களில் தினகரனுக்கு 19 பேர் ஆதரவளித்துள்ளதால், தற்போது, பன்னீர்செல்வம் ஆதரவு மற்றும் எடப்பாடி ஆதரவு என மொத்தம் 116 பேர் உள்ளனர். ஆட்சி நிலைக்க 117 பேரின் ஆதரவு தேவை. ஒருவரின் ஆதரவில் ஊசலாடுகிறது அரசு.
தினகரனின் ஆதரவாளர்கள் 19 பேர், திமுக 89, காங்கிரஸ் 8, முஸ்லிம் லீக் 1 என எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்பாளர்களாக 117பேர் உள்ளனர். காலியிடம் 1 என்பதால், ஒற்றை ஓட்டில் ஊசலாடுகிறது அதிமுக., அரசு.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

Related articles

Recent articles

spot_img