சசிகலா குடும்பத்தினரை நானாக இருந்ததால் சமாளித்தேன்! மற்றவர்கள் தற்கொலை செய்திருப்பார்கள்: ஓபிஎஸ்

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

தேனி:
சசிகலா குடும்பத்தினர் எனக்குக் கொடுத்த நெருக்கடிகளை நானாக இருந்ததால் சமாளித்தேன். வேறு யாராவது இருந்திருந்தால், தற்கொலை செய்து கொண்டிருப்பார்கள் என்று பேசினார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். அவரது பேச்சு இப்போது பெரும் சர்ச்சையையும் அதிர்ச்சி அலைகளையும் தோற்றுவித்துள்ளது.

ஏற்கெனவே மௌன யுத்தம், தியான யுத்தம், தர்ம யுத்தம் நடத்தி, இப்போது வார்த்தை யுத்தம் தொடங்கியிருக்கிறார் ஓபிஎஸ். தன் மீது அனுதாப அலை தோன்றுவதற்காக அவர் பேசிய பேச்சு, பலரையும் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது.

ஜெயலலிதாவின் 70ஆவது பிறந்தநாள் விழா குறித்த ஆலோசனைக் கூட்டம் தேனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொருளாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்டு பேசிய ஓபிஎஸ்., தான் ஏதோ விருப்பப் பட்டு துணை முதல்வராகவோ, அமைச்சராகவோ இல்லை என்பதைச் சொல்வதற்காக பேச்சைத் தொடங்கியவர், மோடியின் வற்புறுத்தலால் இவ்வாறு அமைச்சர் பதவியில் இருப்பதாகவும் கூறினார்.

அவர் பேசியதில் தெறித்த விஷயங்கள்…

தினகரனிடம் பேசக்கூடாது என ஜெயலலிதா என்னிடம் கூறினார். தினகரனுடன் தொடர்பில் உள்ளீர்களா என்று அவர் என்னிடம் அடிக்கடி கேட்டு வந்தார். நான் உயிருடன் இருக்கும் வரை தினகரனை வீட்டிற்குள் அனுமதிக்கக் கூடாது என அவர் கூறியிருந்தார். நீங்கள் ஒருவர் மட்டுமாவது விசுவாசமாக இருங்கள் என்று ஜெயலலிதா என்னிடம் கூறினார். 2016ஆம் ஆண்டு தேர்தலில் சசிகலா குடும்பத்தின் எதிர்ப்பை மீறித்தான் ஜெயலலிதா எனக்கு சீட் கொடுத்தார். தேர்தலில் என்னை தோற்கடிக்க தினகரன் உள்ளிட்டோர் சதி செய்தனர்.

ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்த காரணத்தால்தான் சசிகலா குடும்பம் என்னை துரோகி எனக் கூறுகிறது. மீண்டும் என்னை டீக் கடையில் அமர வைப்பதாக தினகரன் பேசி வருகிறார். தேர்தலில் தோற்கடித்து உடுத்திய உடையோடு வீட்டிற்கு அனுப்புவேன் என சசிகலா கூறினார். சசிகலா குறித்து நான் ஒரு சதவீதம் மட்டுமே கூறியுள்ளேன். எனக்கு கோபம் வரும் போது மீதியையும் கூறுவேன்.

நான் முதல்வராக இருந்தபோது சசிகலா குடும்பத்தினர் எனக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர். நானாக இருந்ததால் சமாளித்தேன். வேறு யாராவது என்றால், தற்கொலை செய்திருப்பார்கள். நான் கட்சி நலனுக்காகவே அனைத்தையும் தாங்கிக் கொண்டேன்… – என்று பேசினார்.

அவரது இந்தப் பேச்சு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா குடும்பத்திற்கு பன்னீர்செல்வம் தர்ம யுத்தம் மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தான், தர்மயுத்தம் மேற்கொண்டதே, சசிகலா குடும்பத்தினர் மிரட்டி ராஜினாமா கடிதம் பெற்றதால் தான் என்பதை வெளிப்படுத்தியுள்ளார் ஓபிஎஸ். மீண்டும் சசிகலா குடும்பத்தினர் மீது ஓபிஎஸ்., குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.