மதுரை செங்கோட்டை வழித்தடத்தில் ராஜபாளையம் -சங்கரன்கோவில் இடையே ரயில் பாதையை சீரமைத்து பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராஜபாளையம் – சங்கரன் கோவில் ரயில் வழித்தடப் பிரிவில், சோழபுரம்-கரிவலம் இடையே ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு ரயில் பாதையை பலப்படுத்தும் பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த 5 கிலோமீட்டர் பகுதியும் கரிசல் மண் பகுதியாகும்.இதில் 60 கிலோ கிராம் எடை கொண்ட கான்கிரீட் கட்டைகளில் 52 கிலோ கிராம் எடை கொண்ட தண்டவாளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கரிசல் மண் அமைப்பு கோடைகாலத்தில் சுருங்கும் தன்மை கொண்டது.மழைக்காலத்தில் விரிவடையும் தன்மை கொண்டது.இதனால் அந்த பகுதியில் ரயில்களை அனுமதிக்கப்பட்ட வேகமான 100 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க கடும் சவாலாக இருந்து வந்தது. ரயில்கள் இயக்கப்படும் போது அந்தப் பகுதியில் திடீர் அதிர்வுகள் உணரப்பட்டன.எனவே இரயில்களை பாதுகாப்பாக இயக்க அந்தப் பகுதியில் ரயில் பாதை பலப்படுத்தும் பணி துவக்கப்பட்டுள்ளது.
இந்தப் பகுதிகளில் ஒரு மீட்டர் ஆழமுள்ள பள்ளம் வெட்டப்பட்டு அதில் செம்மண் நிரப்பப்படும்.பின்பு அதன் மேல் சரளை கற்களுடன்கூடிய ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
இந்த பணிகளுக்காக மதிய நேரத்தில் இயக்கப்படும் மதுரை – செங்கோட்டை – மதுரை ரயில்கள்(06663/06664) 30-செப்டம்பர்-2022 வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
தற்போது ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு பணிகள் நிறைவடைந்து விட்டன. மீதமுள்ள பகுதிகளில் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.