தமிழர் நிலங்களை ஒப்படைக்க இலங்கையிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்: திருமாவளவன்

உள்ளூர் செய்திகள்

thol_thirumavalavan சென்னை: இலங்கையில் ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களின் நிலங்களை அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்குமாறு இலங்கையை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்; ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்துக்கு முன்னர் இதனை செயல்படுத்த வலியுறுத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் புதிய அதிபர் பதவியேற்று பல வாரங்கள் கடந்த பிறகும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவம் திரும்பப் பெறப்படவில்லை. ராணுவத்தை திரும்பப் பெறுவோம் என வாக்குறுதி அளித்து தமிழர்களின் வாக்குகளைப் பெற்று மைத்ரிபால சிறீசேனா வெற்றி பெற்றார். ஆனால், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக இனப்படுகொலைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கவுள்ள ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட இருந்த இலங்கை போர்க் குற்றம் தொடர்பான அறிக்கையை அடுத்த கூட்டத்துக்கு தள்ளிப்போட இலங்கை செய்த முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இந்த அறிக்கை செப்டம்பர் மாதக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார். இலங்கைப் பிரச்னையில் முன்னாள் ஆணையர் நவநீதம் பிள்ளையைப் போல தற்போதைய ஆணையர் செயல்படுவாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சீனாவின் செல்வாக்கைக் குறைக்க அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இலங்கையை தங்கள் பிடிக்குள் வைத்துக் கொள்ளத் திட்டமிடுகின்றன. ஆனால், தமிழர் நலன்களைப் புறக்கணிக்கும் சிறீசேனாவை இந்தியா ஆதரிப்பது புதிராக உள்ளது. அது இந்துமாக் கடல் பகுதியில் அமெரிக்க ஆதிக்கம் பெருகவே வழிவகுக்கும். ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டம் தொடங்கும் முன்பு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும். ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர்களது நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டும். இலங்கையிடம் இதனை இந்திய அரது வலியுறுத்த வேண்டும். வர்த்தக ஒப்பந்தங்களுக்காக தமிழர் நலன்களை பலியிட்டு விடக்கூடாது என திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.