திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் கவிழ்ந்து விபத்து: குழந்தை உட்பட நால்வர் பலி

உள்ளூர் செய்திகள்

திண்டுக்கல்: திண்டுக்கல் வேடசந்தூர் அருகே கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில், குழந்தை உள்பட நான்கு பேர் பலியானார்கள். கரூர் மாவட்டம், வாங்கல்பாளையத்தைச் சேர்ந்த உதயகுமார், மாதுலட்சுமி, ரத்தினம், விஜயகுமார் (37), மனோஜ்ராஜ் (35), ஆதர்ஷ் (6), லாவண்யா (ஒன்றரை வயதுக் குழந்தை) ஆகியோர் நேற்று முன் தினம் திருச்செந்தூர் கோயிலுக்குச் சென்றனர். தரிசனம் முடிந்து நேற்று மதியம் திருச்செந்தூரில் இருந்து கரூருக்குத் திரும்பினர். அவர்கள், திண்டுக்கல் – கரூர் 4 வழிச்சாலையில், வேடசந்தூர் அருகே விருதலைப்பட்டி பகுதியில் வந்த போது, கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடத்தொடங்கியது. பின்னர், சாலையோரம் இருந்த தடுப்புக் கம்பங்கள் மீது மோதி சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், காரில் பயணம் செய்த மாது லட்சுமி, ரத்தினம், உதயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மனோஜ்ராஜ், விஜயகுமார், ஆதர்ஷ், லாவண்யா ஆகியோர் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் வழியில் ஒன்றரை வயதுக் குழந்தை லாவண்யா உயிரிழந்தது. இந்த விபத்து குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.