ஈரோடு அருகே தவறான சிகிச்சையால் இளைஞர் பலி?: உறவினர்கள் சாலைமறியல்

உள்ளூர் செய்திகள்

ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி கஸ்தூரிபா காலனியைச் சேர்ந்த ஜெகநாதனின் மகன் பிரகாஷ் (வயது-26). இவருக்கும், இந்துமதி என்பவருக்கும் கடந்த மூன்று மாதத்துக்கு முன்னர்தான் திருமணம் நடந்தது. இந்நிலையில், கடந்த 23ம் தேதி காலை வங்கி வேலைக்காக வீட்டில் இருந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற பிரகாஷ் முத்துக்கவுண்டன்பாளையம் பிரிவு சுற்றுப்பாதை அருகே வந்தபோது எதிரே வந்த லாரி அவர் மீது மோதியது. இதில், லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். பின்னர் அவரே ஒரு ஆட்டோ பிடித்து ஏறி, ஈரோடு கொல்லம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்ந்தார். அதன் பின்னர் தன் குடும்பத்துக்கு மொபைல் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தனியார் மருத்துவமனையில் பிரகாஷின் உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என உறவினர்களிடம் கூறியுள்ளனர். அதற்காக, ரூ.3 லட்சம் செலவாகும் எனக் கூறியுள்ளனர். உறவினர்களும் உடனடியாக ரூ.1.5 லட்சம் பணத்தைச் செலுத்தினர். அறுவை சிகிச்சையை முடித்ததும், “மயக்கம் தெளிய இன்னும் இரண்டு நாளாகும். பிரகாஷ் நன்றாக உள்ளார்’ என உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் நேற்று காலை பிரகாஷ் இதய நோயால் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த சூரம்பட்டி போலீஸார், உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பிரகாஷின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.