15 நாளில் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர்: ஜி.கே.வாசன்

சற்றுமுன்

கடந்த 15 நாட்களில் சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் த.மா.கா.வில் இணைந்துள்ளனர். இளைஞர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக த.மா.கா. விளங்குகிறது என்று பேசினார் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன். சட்டக் கல்லூரியை இடம் மாற்றக்கூடாது, மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாணவரணி-இளைஞரணி சார்பில் சென்னையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வள்ளுவர்கோட்டம் அருகில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை தாங்கினார். அப்போது ஜி.கே.வாசன் பேசியது… தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி கிடைக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு முழு காரணம் காமராஜர் அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான். இது நமக்கு பெருமை. இன்றைக்கும் மாணவர்களுக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கிறது. அந்த வகையில் மாணவர்களின் நம்பிக்கையைப் பெற்ற கட்சியாக நாம் திகழ்கிறோம். கடந்த 15 நாட்களில் 35 ஆயிரம் மாணவர்கள் நம்முடைய கட்சியில் இணைந்து இருக்கிறார்கள். மத்திய, மாநில அரசுகள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொடுக்க வேண்டும். மாணவர்கள் இந்தியாவின் தூண்கள். மாணவர்களாலே மாற்றத்தை உருவாக்க முடியும். ஆனால் இன்றைக்கு மாணவர்கள் பல்வேறு போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. கல்வி வணிகமயமாகி வருகிறது. இதனால் மாணவர்களின் தொடர் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களுக்கான கல்வி, கட்டமைப்புகளை மத்திய, மாநில அரசுகள் சீராக்கி கொடுக்க வேண்டும். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் மருத்துவ கல்லூரி, சட்ட கல்லூரி, வனக்கல்லூரி மாணவர்கள் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். மாணவர்களின் போராட்டத்திற்கு அரசு செவி சாய்த்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்ட வேண்டும். அதற்கு மாறாக அவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க கூடாது. என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.