தமிழக எம்பி.,க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வதாக அழுத்தம் கொடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் யோசனை!

Published:

சென்னை:

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அனைத்துக் கட்சி தலைவர்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி மறுப்பது ஒட்டுமொத்த தமிழர்களுக்கு கிடைத்த அவமானம்; தமிழக எம்.பி.,க்கள் எல்லாரும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்யப் போவதாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்; திமுக., உறுப்பினர்கள் காவிரிக்காக தங்கள் பதவியை தியாகம் செய்யத் தயார் என்று கூறினார் திமுக., செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின்.

தமிழக அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்துப் பேசலாம் என எதிர்க் கட்சித் தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று இன்று மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்தார். அவருடன் துரை முருகன், முன்னாள் அமைச்சர்கள் சிலர் வந்து ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் மு.க.ஸ்டாலின்.

edappadi pazanisamy - 2026

அப்போது அவர், அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்திற்காக திமுக., நடத்துவதாக இருந்த அனைத்துக் கட்சி கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மேலும் அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திமுக கலந்துகொண்டது. இந்தக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்துக் கட்சி தலைவர்களும் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப் பட்டது. அனைத்துக் கட்சி கூட்ட தீர்மானத்திற்கு பிரமரிடம் இருந்து இதுவரை பதில் இல்லை என்றும், துறை ரீதியான அமைச்சரை சந்தியுங்கள் என்று தில்லியில் இருந்து தகவல் வந்துள்ளதாகவும் துறை அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்யலாமா என்றும் முதல்வர் எங்களிடம் கேட்டார். காவிரி மேலாண் வாரியம் அமைக்க இயலாது என்று கூறிய அமைச்சரை, நாம் சந்தித்து எந்தவித பயனுமில்லை என்றும், தமிழக எம்.பிக்கள் கூண்டோடு ராஜிநாமா செய்யலாம் என்றும் நான் யோசனை தெரிவித்தேன்.

ALSO READ:  தமிழக முதல் அமைச்சராக நாளை பதவி ஏற்கிறார் ஜோசப் விஜய்!

கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு மத்திய அரசு மெத்தனம் காட்டுகிறது. உடனடியாக சட்டப் பேரவைக் கூட்டத்தை கூட்டி, சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் கூறினோம். அதற்கு முதல்வர், திங்கட் கிழமை வரை பொறுத்திருப்போம் என்றும், எந்தவித பதிலும் வரா விட்டால் வரும் 8ஆம் தேதி பேரவையைக் கூட்ட தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தமிழக எம்.பி.,க்கள் கூண்டோடு ராஜிநாமா செய்யப் போவதாக பிரதமருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நாங்கள் கூறியுள்ளோம். திமுக உறுப்பினர்கள் காவிரி விவகாரத்திற்காக ராஜிநாமா செய்யத் தயார்… என்று கூறினார் ஸ்டாலின்.

முன்னதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை ஏற்று, அவரை இன்று தி.மு.க. செயல் தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், குழுவினருடன் சந்தித்துப் பேசினார்.

supremecourt e1503560659330 - 2026

இந்தப் பிரச்னையின் முக்கிய விஷயம், காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கடந்த மாதம் 16ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்புதான்!

இந்தத் தீர்ப்பில், கர்நாடகம் காவிரியில் தமிழ்நாட்டுக்கு திறந்து விடவேண்டிய தண்ணீரின் அளவு, நடுவர் மன்றம் நிர்ணயித்து இருந்த 192 டி.எம்.சி.யில் இருந்து 177.25 டி.எம்.சி.யாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

பாசனத்துக்காக தமிழகம் கூடுதல் தண்ணீர் கேட்டு வந்த நிலையில், நடுவர் மன்றம் நிர்ணயித்து இருந்த நீரின் அளவில் 14.75 டி.எம்.சி.யை உச்ச நீதிமன்றம் குறைத்தது பெரும் அதிர்ச்சி அளிப்பதாக அமைந்தது. தமிழகத்துக்கு குறைக்கப்பட்ட இந்த 14.75 டி.எம்.சி. நீர் கர்நாடகத்துக்கு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு கர்நாடகத்துக்கு சாதகமாக அமைந்த போதிலும், மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கக்கூடாது என்று கர்நாடக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 22ஆம் தேதி அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தினார். அந்தக் கூட்டத்தில், அனைத்துக் கட்சி தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் அடங்கிய குழுவினர் பிரதமர் மோடியை சந்தித்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு வற்புறுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

stalin edappadi - 2026

இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு திடீரென்று மு.க. ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசிக்க விரும்புவதாகவும் எனவே இன்று (வெள்ளிக்கிழமை) வர முடியுமா? என்றும் கேட்டார்.

அதற்கு மு.க.ஸ்டாலின், “மாவட்ட தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதால் இன்று (வெள்ளிக்கிழமை) தன்னால் வர இயலாது” என்று கூறினார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

அப்படியானால் நாளை (சனிக்கிழமை) வர முடியுமா? என்று முதல்வர் கேட்க, அதற்கு மு.க.ஸ்டாலின் சம்மதித்தார். அதன்படி, இன்று அவரை சந்தித்துப் பேசினார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியோ இன்று சேலம் செல்வதாக இருந்தார். இருப்பினும் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்துவதாக இருந்ததால் அவர் தனது சேலம் பயணத்தை ரத்து செய்தார்.

SID 1460941g - 2026

இந்நிலையில், கர்நாடகத்தில் ஒரு பெரிய நாடகத்தை நடத்துகிறார் முதல்வர் சித்தராமையா. தேர்தல் நெருங்குவதால், அடுத்த முறையும் முதல்வர் கனவில் மிதக்கும் முதல்வர் சித்தராமையா வரும் 7ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி காவிரி நீர் பிரச்னை தொடர்பாக ஆலோசனை நடத்த இருக்கிறார். அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்து, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் கருத்து கூறியுள்ள போதிலும், அதனையும் எதிர்த்து நடவடிக்கையில் இறங்குகிறது கர்நாடக காங்கிரஸ் கட்சி.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img