உன்னை ஃபெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே மாணவிகளை நிர்வாணப் படமெடுத்து பாலியல் துன்புறுத்தலைச் செய்து வந்த ஆசிரியர் கைது செய்யப் பட்டுள்ளார்.
நெல்லைன் மாவட்டம் பணகுடி அரசு உயர்நிலைப் பள்ளியின் கணினி ஆசிரியர் அந்தோணிசாமி. இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இதே ஊரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் பணியாற்றினார். அப்போது மாணவிகளிடம் கணினி தேர்வில் ஃபெயிலாக்கி விடுவேன் என்று மிரட்டி மிரட்டியே, மாணவிகளை முத்தமிடுவது, பாலியல் ரீதியில் துன்புறுத்துவது போன்றவற்றில் ஈடுபட்டுள்ளார். வகுப்பறையில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி அதனை தனது மொபைலில் வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார். அப்பாவி மாணவிகளை நிர்வாணப் படுத்தி, அந்த வீடியோக்களையும் தனது மொபைல்போனில் பதிவு செய்துள்ளார்.
இவை எல்லாம் வெளியில் தெரியாமலேயே இருந்து வந்தது. ஆனால், தொழில்நுட்பம் எப்படியாவது காட்டிக் கொடுத்து விடுமே. அப்படித்தான் இவரும் மாட்டிக் கொண்டார். ஒரு நாள் இவரது மொபைல் போன் ரிப்பேர் ஆனது. இதை அடுத்து, மொபைல் போனை எடுத்துக் கொண்டு அருகில் உள்ள கடைக்குச் சென்றார். ஆனால், அந்த மெமரி கார்டை எடுக்காமல் ரிப்பேருக்குக் கொடுத்து விட்டார்.
கடைக்காரர் மெமரி கார்டை கணினியில் போட, ஆசிரியர் அந்தோணிசாமி எப்படி எல்லாம் மாணவிகளிடம் பாடம் நடத்தினார் என்ற விவரம் எல்லாம் ஒவ்வொன்றாகத் தெரியவந்தது. இவை எல்லாவற்றையும் தனது கணினியில் சேர்த்துக் கொண்டார், வர்த்தக எண்ணம் கொண்ட வழக்கமான கல்நெஞ்சக் கடைக்காரர்.
தொடர்ந்து, தனது நட்பு வட்டத்திலும் அந்தக் காட்சிகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் நண்பர்கள் சிலரின் மொபைல் போனுக்கு பகிரப் பட, அவர்களில் சிலர் இந்தக் காட்சிகளை வைத்தே ஆசிரியர் அந்தோணி சாமியை மிரட்டினர். குறிப்பிட்ட பணம் தந்தால், அவற்றை அழித்து விடுவதாகக் கூறி, பணத்தைக் கறந்தனர். ஒரு கட்டத்தில், மிகப் பெரும் தொகையை பிளாக்மெயில் செய்தவர்கள் கேட்கவே, ஆசிரியர் அந்தோணிசாமி பணம் தர மறுத்துவிட்டார்.
இப்போதுதான் அந்த செல்போன் கடைக்காரரின் நண்பர்களுக்கு சமூக அக்கறை பளிச்சிட்டது. நம் ஊர் மாணவிகளை, ஒரு ஆசிரியர் இப்படி பாலியல் ரீதியில் துன்புறுத்துவதா என்று வீறு கொண்டு எழுந்தனர். நேரே காவல் நிலையம் சென்றனர். ஆசிரியர் அந்தோணிசாமி மீது புகார் செய்தனர்.
மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்யும் காட்சிகளைக் கண்ட பணகுடி காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்களிடம் புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், அரசு கொடுத்த ஊதியத்தில் ஆசிரியப் பணியை செவ்வனே செய்து மாணவிகளுக்கு பாலியல் பாடம் எடுத்து வந்த அந்தோணிசாமியைக் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.