dinakaran interview - 2026

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வரும் மார்ச் 25ஆம் தேதி தஞ்சையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

காவிரி விவகாரத்தில் கடந்த பிப்.16ம் தேதி உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை அளித்தது. அதன் படி, காவிரியில் இருந்து கர்நாடகம் தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி நீர் திறந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப் பட்டது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வார காலத்தில் அமைக்கவும் உத்தரவிட்டது. இது இறுதித் தீர்ப்பு என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இதை அடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுமார் 4 வார காலம் முடிந்துவிட்ட நிலையிலும், அதுகுறித்து எந்த வித நடவடிக்கையும் மத்திய அரசு எடுப்பதாக தெரியவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து கர்நாடகம் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கர்நாடகத்தில் தேர்தல் வருவதை ஒட்டி, மாநில அரசு காவிரி அரசியலில் ஈடுபட்டு வருகிறது. அதன் மூலம் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. அதுபோல், தமிழகம் தரப்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் தரும் வகையில், காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வலியுறுத்தி தமிழக அதிமுக., எம்பி.,க்கள் தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, சென்ற வாரம் டிடிவி தினகரன் துவங்கிய புதிய கட்சியான அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மார்ச் 25ஆம் தேதி தஞ்சையில் உண்ணாவிரத போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இப் போராட்டத்தில், டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளார். புதிய கட்சி தொடங்கிய பின் தினகரன் அறிவித்துள்ள முதல் போராட்டம் இது.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending