January 19, 2025, 9:18 AM
25.7 C
Chennai

எடப்பாடியாருக்கு ஆபத்து…! நெல்லையப்பா காப்பாத்து..!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் குடமுழுக்கு விழா குறித்த தேதியில் நிகழ்த்தப் பட்டால், நாட்டை ஆள்பவர்க்கு ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள் ஜோதிடர்களும் சாஸ்திர விற்பன்னர்களும்!

குடமுழுக்கு விழா குறித்து தேதி அறிவிக்கப்பட்டு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்ட நிலையில், இந்தத் தகவல்களால் ஏற்பட்ட குழப்பத்தில், கும்பாபிஷேக தேதியில் மாற்றம் வருமா என்று எதிர்பார்க்கிறார்கள் அன்பர்கள் பலர்! சைவ ஆதீனங்கள், மடாதிபதிகள், ஜோதிடர்கள் உள்ளிட்டோர் குடமுழுக்கு விழா தேதியை தேதியை மாற்ற வலியுறுத்துகின்றனர்.

நெல்லையப்பர் கோவிலில் என்று பாலாலயம் ஆனதோ, அன்றிலிருந்தே குழப்பங்கள்தான். பாலாலயம் ஆனதே குழப்பத்தில்தான் என்பதால், எல்லாவற்றிலுமே நீடிக்கிறது குழப்பம்.

தற்போது குறிக்கப்பட்டுள்ள தேதியன்று கும்பாபிஷேகம் நடத்தினால் நாட்டு மக்களுக்கும்,அரசு செய்யும் ஆட்சிக்கும், ஆட்சியாளருக்கும், மக்களுக்கும் மிகப் பெரிய ஆபத்தும் கேடும் உள்ளது என்று ஆதீனங்களும்,ஜோதிட வல்லுநர்களும் அடித்துக் கூறுகின்றனர்.

நெல்லைக்கு பெயர் வருவதற்குக் காரணமே நெல்லை வேலியிட்டுக் காத்த நெல்லையப்பர்தான்! இந்தக் கோயிலில்  பாலாலயம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்று திருப்பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன. தற்போது வருகின்ற ஏப்ரல் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெறப் போவதாக திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்நிலையில் பக்தர்கள் தரப்பில் திருப்பணி 10.சதவீதம் கூட நடைபெறாத நிலையில் கும்பாபிஷேகம் நடத்துவதா என கடந்த இரண்டு மாதங்களாக பல்வேறு வழிகளில் பக்தர்கள் தரப்பில் இருந்து ஆட்சேபணைகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து கும்பாபிஷேக தேதி குறித்துக் கொடுத்தவரிடம் பேசினோம். ஏன் இத்தனை குழப்பங்களிந்த தேதியில் என்று! சித்திரை மாதத்தில் எந்த தேதியும் சிறப்பாக இல்லை. அதனால் இருக்கும் தேதிகளில் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய தேதியை குறித்துக் கொடுத்தோம் என்று கூறினார். அடுத்து வரும் வைகாசி மாதத்தில் வைக்கலாமே என்றபோது, அது, மல மாதம் என்பதால், இந்த வருட வைகாசி மாதத்தில் குடமுழுக்கு வைபோகம், சுபகாரியங்கள் நடத்தக் கூடாது என்றார்.

திருப்பணிகளே நிறைவு பெறவில்லை, இந்நிலையில் ஏன் கும்பாபிஷேகத்துக்கு இவ்வளவு அவசரம் காட்டுகிறார்கள்; அடுத்து வரும் ஆனி, ஆவணி மாதங்களில் வைத்துக் கொள்ளலாம் அல்லவா என்று கேட்ட போது,  திருக்கோயில் நிர்வாகத்தினர் தரப்பில் ஆனித் திருவிழா நடத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்ததாகவும், எனவே, அதற்கு முன்னதாக அவசியம் குடமுழுக்கு நடத்தியே ஆக வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், எனவே வேறு வழியின்றி சித்திரை மாதத்தில் வரும் ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடிய தேதியை குறித்துக் கொடுத்ததாகவும் கூறினார்.

ALSO READ:  செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சமத்துவ பொங்கல் விழா

சொல்லப் போனால்,  நெல்லையப்பர் திருக்கோவிலில் பன்னிரண்டு மாதங்களுமே திருவிழாக்களின் மாதங்கள்தான். இப்படி, பக்ஷ உத்ஸவம், மாச உத்ஸவம், சம்வத்ஸர உத்ஸவம் நடக்கும் பெரிய திருக்கோயில்களில், திருப்பணிகளை பகுதி பகுதியாக முடித்து, சில சந்நிதிகளைச் சேர்த்து பாலாலயம் செய்து, திருப்பணி நிறைவுற்றதும் பகுதி பகுதியாக கும்பாபிஷேகம் செய்து வைப்பார்கள். திருவரங்கம் திருக்கோயில் உள்ளிட்ட பெரும்பாலான பெரிய கோயில்களிலும் இப்படித்தான் நடந்தது.

நெல்லையப்பர் கோயிலில் 2004 குடமுழுக்கிற்கு முன்னர் நடந்த பாலாலயமும் கூட இவ்வாறு பகுதி பகுதியாகவே நடந்தது. ஆனால் இம்முறை வெகு ரகசியமாக இரவோடு இரவாக அவசர அவசரமாக பாலாலயம் நடைபெற்றது. அதுவும், கோவிலின் பிரதான மூலஸ்தானம் தவிர்த்து ஏனைய சந்நிதிகள் முழுவதும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு, கோவில் திருவிழா காலங்களையும் தடை செய்து விட்டு, தற்போது ஆனித் திருவிழாவின் பெயரில் அவசரப்படுத்துகின்றனர் என்று குற்றம் சாட்டுகிறார் நெல்லை திருக்கோயில்கள் வழிபடுவோர் சங்க பொதுச் செயலாளர் கயிலை கண்ணன்.

 

அவர் இந்த பிரச்னை குறித்து மேலும் தெரிவித்த போது, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30ஆம் தேதி நடைபெற்ற கும்பாபிஷேக ஆலோசனைக் கூட்டத்தில் அறநிலையத் துறை இணை ஆணையர் பரஞ்சோதி பாலாலயம் செய்து மூன்று மாதத்தில் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார் அப்போதே அதற்கு பக்தர்கள், முன்னாள் திருப்பணிக் குழுவினர் உட்பட பலர் ஆட்சேபித்தனர். அந்த எதிர்ப்புக் குரல்களை எல்லாம் செவி மடுக்காமல், தாம் நினைத்தபடியே  பாலாலயம் நடத்தி, நான்கு மாதத்திற்குள் கும்பாபிஷேகம் செய்ய மல்லுக்கு நிற்கிறார்கள். ஏன் இந்த அவசரம் என்று  தெரியவில்லை.

இப்படி செய்ய முயற்சி செய்தால், உள்ளூர் பட்டர்கள், திருப்பணிக் குழுவினர், பொதுமக்களின் எதிர்ப்பு வரும் என்று அதிகாரிகள் முன்னதாகவே நினைத்துக் கொண்டு, இந்தக் கோயிலுக்கு சம்பந்தமே இல்லாத, வெளிநபரான தூத்துக்குடி சிவஶ்ரீ செல்வம் பட்டர் உதவியுடன் பாலாலயத்தை நடத்தியுள்ளார்கள். அவருக்கு உறுதுணையாக,  நெல்லையப்பர் கோயில் பட்டியலில் இல்லாத பிச்சையா பட்டர் இருந்திருக்கிறார். அதுவும், முதல் நாள் மாலை கோயிலுக்கு பக்தர்கள் எல்லாரும் வந்து தரிசனம் முடித்துவிட்டு சென்றபோது,  அவர்களுக்கே எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை, நோட்டீஸ் போர்டில் கூட ஒரு அறிவிப்பை ஒட்டவில்லை. மறுநாள் காலையில் பார்க்கும் போது, சந்நிதிகளுக்கு பாலாலயம்  ஆகியிருக்கிறது என்று ஆதங்கப் படுகிறார்கள் பக்தர்கள்.

ALSO READ:  மதுரை மாவட்ட கோயில்களில் கந்த சஷ்டி - சூரசம்ஹாரம்!

நெல்லையப்பர் கோவில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழா நடைபெறும் கோவில் என்பதை அறிந்தும் கோவில் கொடிமரம் உட்பட அனைத்து சந்நிதிகளையும் ஒரே நாளில் பாலாலயம் செய்து கொடுத்துள்ளார் செல்வம் பட்டர். ஆனால் இன்று வரை, கொடிமரத்தில் எந்தவித திருப்பணியும் நடைபெறவில்லை. இதுவரை திருப்பணி நடைபெறாத கொடிமரத்தையும் சேர்த்து ஏன் பாலாலயம் செய்ய வேண்டும் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள் பக்தர்கள்.

நெல்லையப்பரைப் போல், நெல்லை வாழ் மக்களின் உணர்வு பூர்வமான தெய்வமான அன்னை காந்திமதி அம்பாள் சந்நிதியிலும் சுவாமி நெல்லையப்பர் சந்நிதியிலும் திருப்பணிகள் முறையாக நடந்தனவா என்றால் இல்லை என்று அடித்துக் கூறுகிறார்கள் பக்தர்கள்.

பக்தர்கள் இது குறித்து தங்கள் அதிருப்தியைத் தெரிவித்து, கேள்விகள் சிலவற்றை முன்வைக்கின்றனர்.

திருப்பணிக் கமிட்டி அமைக்காமல் கும்பாபிஷேகம் நடத்தக் கூடாது என்று பக்தர்கள் கூறிய போது, கமிட்டி அமைக்காமல் தற்போது பணம் பிரிப்பதற்காக உபய திருப்பணி கமிட்டி அமைத்ததன் ரகசியம் என்ன?

இந்த கமிட்டி பணம் பிரிக்க அனுமதி வழங்கியது யார்? இவர்கள் பிரிக்கும் பணம் யார் யாருக்கு பங்கு? உபய திருப்பணி கமிட்டி எதற்கு ?

பன்னிரண்டு மாதங்களும் திருவிழா நடக்கும் கோவில் இயல்பையே முடக்குமாறு பாலாலயம் செய்த தூத்துக்குடி சிவஶ்ரீ செல்வம் பட்டரின் அவசரம், இதன் பின்னணியை சந்தேகக் கண் கொண்டு பார்க்கத் தூண்டுகிறது.  மேலும் கோவில் பட்டர்கள் கும்பாபிஷேகப் பொறுப்பினை தாங்கள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்த பின்னரும் செல்வம் பட்டரையே தற்போது சர்வ சாதகமாக நியமித்திருப்பது சந்தேகத்தை வலுப்படுத்துகிறது. திருப்பணிகள் முறையாக முழுமையாக முடியாத நிலையில் கும்பாபிஷேகம் செய்வது சரிதானா என்று பக்தர்கள் மனம் நொந்து கூறுகின்றனர்.

ALSO READ:  மதமாற்ற பாதிரி மீது புகார் கொடுத்த இளைஞர்கள் மீது தாக்குதல்: இந்து முன்னணி கண்டனம்!

வரும் ஏப்ரல் 27 அன்று அன்று கும்பாபிஷேகம் நடந்தால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசு ஆட்சி செய்பவர்களுக்கும் பெரும் கேடு வரும் என்று சாஸ்திரங்கள் குறித்திருப்பதை அறிந்தும், இதனை பிரபல ஜோதிடர்கள் சொல்லி சுட்டிக் காட்டியும் கூட ஏன் இந்த தேதியில் வைத்தார்கள்?

தருமை ஆதீனமும் கூட தம்முடைய கடுமையான ஆட்சேபத்தை கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் தெரிவித்ததாக தருமை ஆதீன வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் அறநிலையத்துறை இந்த தேதியில் கும்பாபிஷேகம் நடந்தால் மட்டுமே ஆனித் திருவிழா நடைபெறும் எனத் தெரிவித்ததாகவும், அதற்கு அவசரமாகவும் சிந்திக்காமலும் பாலாலயம் செய்து விட்டு இப்போது சிந்திப்பது பலனில்லை எனவும், திருவிழா முக்கியமா நாட்டு நலன் முக்கியமா என ஆதீனம் கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.

அதற்கு திருக்கோயில் நிர்வாகம், தாங்கள் நிர்ணயித்த தேதியை மாற்றாமல் அதிகாலை 4.40 முதல் 5.10 வரையாக இருந்த கும்பாபிஷேக நேரத்தை காலை 9.25 முதல் 10.15 வரை என மாற்றம் செய்யலாம் என ஆலோசித்ததாகவும், அதற்கும் ஆதீனம் தன் ஆட்சேபத்தை தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த திட்டத்தையும் கைவிட்ட நிர்வாகம், தாங்கள் முன்னர் யோசித்த அதே நேரத்திலேயே கும்பாபிஷேகம் நடத்த முடிவு எடுத்து, அழைப்பிதழையும் அச்சடித்து அனைவருக்கும் வழங்கிவிட்டது.

இந்த அழைப்பிதழ் முதல்வர் எடப்பாடியார் கவனத்துக்கும் சென்றிருக்கும். ஆனால், இதில் ஒரு ரகசியத்தை நெல்லை மக்கள் கிசுகிசுக்கிறார்கள். இந்தக் குடமுழுக்கு விழாவின் பின்னணியில் திகழும் அந்த நபர், தினகரன் ஆதரவாளர் என்றும், எடப்பாடி அரசு கவிழ வேண்டும் என்பதற்காகத்தானே இந்த நாளில் செய்கிறோம் என்று வீம்புக்குக் கூறியதாகவும் ஒரு பேச்சு உலா வருகிறது…!

எப்படியாய் இருந்தால் என்ன… எடப்பாடியாருக்கு ஆபத்து… எங்களைக் காப்பாத்து  நெல்லையப்பா… இதுதான் இப்போதைய பிரார்த்தனையாக இருக்கிறது நெல்லையப்பரை தரிசிக்க வரும் பக்தர்களிடம்!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week