சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று மாலை திமுக., சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகத்தில் அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, ஏப்ரல் 16 அன்று மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி ஏப்ரல் 23-ம் தேதி தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி இன்று புதுக்கோட்டையில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பல்வேறு இடங்களில் நடக்கும் மனிதச் சங்கிலிப் போராட்டத்தில் கலந்துகொள்கின்றனர்.