லண்டன் : டோக்லாம் பிரச்னை பற்றி என்னிடம் கேட்காதீர்கள். இன்னும் அதன் முழுமையான விவரங்கள் எனக்குத் தெரியாது. ஆனால், பிரதமர் மோடி கவனமாக செயல்பட்டிருந்தால் டோக்லாம் பிரச்னையை தடுத்திருக்கலாம். இப்படிக் கூறி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திருதிருவென விழித்துக் கொண்டிருக்கிறார் இப்போது! சமூக வலைத்தளங்களில் ராகுலின் ‘எதுவும் தெரியாது’ என்ற பதில் பலராலும் விமர்சிக்கப் பட்டு வருகிறது!
லண்டனில் உள்ள கல்வி நிறுவனத்தில், ராகுல் பேசியபோது டோக்லாமில் சீனா அத்துமீறி நுழைந்ததை, பிரதமர் நரேந்திர மோடி தனி சம்பவமாக பார்க்கிறார். அதை சீனாவின் பல அத்துமீறல்களின் தொடர்ச்சியாக பார்த்திருந்தால், அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்திருக்க முடியாது. உண்மையைச் சொல்வதானால் டோக்லாமில் சீனர்கள் இன்றும் உள்ளனர் என்று பேசினார்!
லண்டன் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசும்போது, “டோக்லாமில் இன்னும் சீனப்படைகள் நிலை கொண்டுள்ளது என்பது உண்மை” என்றார்.
தொடர்ந்து, “டோக்லாம் தனிமைப்படுத்தப்பட்ட பிரச்சினை கிடையாது. டோக்லாம் விவகாரம் பிரதமர் மோடியை பொறுத்த வரையில் ஒரு நிகழ்வு மட்டுமே! ஆனால், இதனை முக்கியமான நடவடிக்கையாக பார்த்து, கவனமாக கையாண்டால் அவர் அதனை நிறுத்தியிருக்கலாம்” என்றார்.
ஆனால், டோக்லாம் பிரச்னை குறித்த முழு விவரம் எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நான் இதை வேறு விதமாக கையாளுவேன் என ராகுல் கூறியது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது.
இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளுக்கு இடையே அமைந்துள்ளது டோக்லாம். இந்தப் பகுதியை சீனா தனக்கு சொந்தம் கொண்டாடுகிறது. ஆனால், பூடான் நாடு தன் பகுதி என்கிறது. இந்த மோதலில், வலிவற்ற நாடான பூடானுக்கு ஆதரவாக, இந்தியா உள்ளது. அண்மையில் சீனா டோக்லாம் பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்ட போது, இந்திய ராணுவத்தினர் அதை தடுத்தனர். இதனால் இந்தியா, சீனா இடையே மோதல் போக்கு நிலவியது. இரு நாடுகளுக்கும் இடையில் பதட்ட நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், லண்டனின் ஐஐஎஸ்எஸ்.ஸில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல், ‘டோக்லாம் விவகாரம் தற்போது புதிதாக நடப்பது இல்லை. முன்பு நடந்த நிகழ்வுகளின் தொடர்ச்சிதான். அதனால் மோடி அதை பக்குவமாக கவனித்து நிறுத்த நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்று பேசினார்.
ஆனால் பார்வையாளர்களில் ஒருவர், சரி மோடியை விடுங்கள்… நீங்கள் இந்த விவகாரத்தை எப்படி கையாண்டிருப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு ராகுல், இந்த விஷயத்தின் முழு விவரமும் எனக்கு தெரியாது. தெரிந்தால் அதை ஆட்சியில் அமரும் போது நான் கையாளும் விதமே வேறு என்று பதில் கூறினார்.
அவர் கூறிய பதில், அங்கிருந்தவர்களை மட்டுமல்ல, இந்த நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்த குறிப்பிட்ட காட்சி மட்டும் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. இதனை பலரும் விமர்சித்து, ராகுலை உண்டு இல்லை என்று ஆக்கி வருகிறார்கள்.
இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை! ராகுல், வெளியுறவுத்துறையின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு உறுப்பினராக உள்ளார். இந்தக் குழு டோக்லாம் விவகாரத்தில் இந்தியா சீனாவின் நிலை குறித்து பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்துள்ளது.
மேலும், டோக்லாம் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, ராகுல் சீன தூதர், அதிகாரிகளை ரகசியமாக சந்தித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பு குறித்து செய்தி வெளியான போது, மன்மோகன் சிங் உள்ளிட்டோருடன் ஒரு டீ பார்ட்டியில் தான் கலந்து கொண்டதாக ராகுல் தரப்பில் இருந்து விளக்கம் வெளியானது.
இதை அடுத்து மோடியும், நாடாளுமன்றத்தில் பேசிய போது, டோக்லாம் விவகாரம் உச்சத்தில் இருந்த போது, ராகுல் ஏன் சீன தூதரக அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டும் என்று கேள்வி எழுப்பினார். அப்போதும் நாடாளுமன்றம் அமளிதுமளிப் பட்டது.
இவ்வளவு நடந்த பின்னும், டோக்லாம் விவகாரத்தில் தனக்கு ஒன்றும் தெரியாது என்று ராகுல் கூறியிருப்பது, வெறும் மோடி எதிர்ப்பு என்ற விவகாரத்தை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு வேலையற்ற வேலையை ராகுல் பார்த்துக் கொண்டிருப்பதையும், முதிர்ச்சியற்ற ஒரு மனிதராக வெளியுலகுக்குக் காட்டிக் கொண்டும் உள்ளது.
அந்த வீடியோ காட்சி….




