நெல்லை மாவட்டம் கடையநல்லூரில் ஒரு கடையில் உள்ளே வரும் பெண் ஒருவர், தன்னுடன் ஒரு இளைஞரையும் அழைத்து வருகிறார். பொருள்கள் வாங்குவது போல், அதை எடு இதை எடு என்று சொல்லி, கடைக்காரரை ஏவி விட்டு, அவர் அசந்திருக்கும் சமயம் பார்த்து பொருள்களை பையில் திணித்துவிடுகிறார்.
இந்தக் காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி, கடையநல்லூர் வியாபாரிகளிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடையநல்லூர் மெயின் ரோட்டில் பேஸ்புக் என்ற பெயரில் புத்தகக் கடை நடத்தி வருகிறார் அப்பாஸ். இவரது கடையில் தான் கடந்த வாரம் இந்த திருட்டு நடைபெற்றுள்ளது. சிசிடிவி கேமராவை ஆராய்ந்த அப்பாஸ் அதிர்ச்சி அடைந்து இதனை வெளியில் பரவ விட்டுள்ளார்.
கடைக்குள் நுழையும் போதே, காலால் தள்ளி குடையைத் திருடும் அந்தப் பெண், பின்னர் இரண்டு பொருட்களை திருடுகிறார். இந்தத் திருட்டுப் பொருள்களின் மதிப்பு ரூ 1000 இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், அந்தப் பெண்மணி புத்தகக் கடையில் திருடும் காட்சிகள் செல்போனில் சமூக வலைத்தளங்களில் வைரலான சில மணி நேரத்தில் திருடிய பெண்ணை அடித்துக் கண்டித்த கணவர், அந்தக் கடைக்கே இழுத்து வந்தார்.
பின்னர் கடைக்காரரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு தன் மனைவி திருடிய பொருட்களுக்கு பணத்தையும் கொடுக்க முன்வந்தார். அப்போது என்னை என் மனைவி அசிங்கப்படுத்தி விட்டார் என்று கண்ணீர் விட்டார்.
செய்தி: குறிச்சி சுலைமான்