தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கு அவர் சாகும் வரை சிறைத் தண்டனை அளித்து தஞ்சாவூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சிவகொள்ளைப் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவருக்கு மன வளர்ச்சி குன்றிய நிலையில் பெண் குழந்தை இருந்துள்ளது. இவர் பின்னர், மன வளர்ச்சி குன்றிய தன் மகளை தொடர்ந்து பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தையின் மூலமாக அவரது மகளுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
தமிழகம் முழுவதும் இந்தச் செய்தி அப்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மகளை வன்கொடுமை செய்ததாக சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார்.
குழந்தைகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்சா சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த தஞ்சை மகளிர் நீதிமன்றம், இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியது.
அதன்படி சுப்பிரமணிக்கு 4 ஆயுள் தண்டனைகள் விதித்து, அவர் சாகும்வரை சிறைத் தண்டனை அனுபவிக்கும்படி தீர்ப்பு அளித்தது.