தமிழக அரசு, அரசு உதவி, சிறுபான்மை மற்றும் தனியார் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாக, 35 புதிய விதி முறைகளை உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.
அவற்றை கண்டிப்பாக கடைபிடிக்காவிட்டால் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரிக்கப்பட்டுள்ளது.கல்வியாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் கொண்ட குழுவின் தீவிர ஆய்வுக்குப் பின், புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இவற்றை, வரும் கல்வியாண்டில் பின்பற்ற, சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது. அதன் விவரம்: * இளங்கலைக்கு, 27 ரூபாய்; முதுகலைக்கு, 42 ரூபாய் என, விண்ணப்பக் கட்டணம் இருக்க வேண்டும். கல்வி கட்டணத்தின் முழு விவரம், விண்ணப்பத்துடன் இணைந்த மாணவர் சேர்க்கை விவரக் குறிப்பேட்டில் இருக்க வேண்டும். விண்ணப்பம் *பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாகும், ஐந்து நாட்களுக்கு முன், விண்ணப்பம் வழங்க வேண்டும். *பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் வழங்கும் தேதியில் இருந்து, குறைந்தது, 10 நாட்களுக்குப் பின் பூர்த்தி செய்த விண்ணப்பம் அளிக்க அவகாசம் அளிக்க வேண்டும். *பிளஸ் 2 ‘ரெகுலர்’ மாணவர்கள் தவிர மற்றவர்களுக்கு கூடுதல் அவகாசம் தர வேண்டும். *விண்ணப்பம் பெற்ற, 11வது நாளில் தரவரிசைப் பட்டியலையும், 14ம் நாளில் மாணவர் சேர்க்கை முடிவுகளையும் கல்லூரி அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். *தாமதமாக வரும் விண்ணப்பங்களைத் தனியாக பெற்று பரிசீலிக்க வேண்டும். *இளங்கலைப் படிப்பில் சேர அதிகபட்ச வயது, 21. இதில், பொதுப்பிரிவினர் தவிர மற்ற பிரிவினர், பெண்களுக்கு, மூன்று ஆண்டுகள்; மாற்றுத் திறனாளிகளுக்கு, ஐந்து ஆண்டுகள் விலக்கும் உண்டு. *மாணவர் சேர்க்கை தேர்வுக் குழுவில், மூத்த ஆசிரியர், மூன்று அல்லது, நான்கு பேர் இடம் பெற வேண்டும். இலங்கை அகதிகளுக்கு உரிய விதிமுறைப் படி இடம் அளிக்க வேண்டும். கட்டண விவரம் *விண்ணப்ப விற்பனை, கடைசி நாள் மற்றும் தாமதமாக பெறப்பட்ட விண்ணப்பம், தேர்வுக் குழுவின் தரவரிசைப் பட்டியல், மாணவர்களுக்கு அனுப்பிய சேர்க்கை அட்டை, குழு கூட்டத்தின முடிவுகள், சேர்க்கைப் பதிவேடு, கட்டண விவரம் போன்ற அனைத்தும் ஆவணமாக தயார் நிலையில் இருக்க வேண்டும். *திருநங்கைகள் உள்ளிட்ட மாற்றுப் பாலினத்தவருக்கும் விதிப்படி இடம் அளிக்க வேண்டும். இந்த விதிகளை மீறிய புகார் வந்தால், கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, பல கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.