ஆந்திர பஸ்கள் மீது தாக்குதல்; கல் வீச்சு; கொளுத்த முயற்சி

சென்னை: ஆந்திர மாநிலம் திருப்பதியில் செம்மரக் கட்டைகளை வெட்டியவர்கள் மீது ஆந்திர போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து தமிழகத்தில் ஆந்திர மாநிலத்துக்கு எதிரான போராட்டம் வெடித்தது. அதன் ஒரு பகுதியாக, ஆந்திர மாநில பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. பல இடங்களில் பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன், தீயிட்டுக் கொளுத்தவும் முயற்சி நடந்தது. ஆந்திர மாநிலம் நெல்லூர் ஆத்மகுரு என்ற இடத்தில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஆந்திர மாநில பஸ்சை ராமு (55) என்பவர் ஓட்டி வந்தார். பஸ்சில் பயணிகள் 40 பேர் இருந்தனர். அந்த பஸ் தமிழக எல்லையான தடாவை அடுத்த பூடி கிராமம் அருகே நேற்று மாலை 6 மணி அளவில் வந்த போது 3 மோட்டார் சைக்கிளில் முகத்தை துணியால் மறைத்துக் கட்டியபடி உருட்டுக்கட்டைகளுடன் வந்த 6 பேர் கொண்ட கும்பல் நடுரோட்டில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ஆந்திர மாநில அரசு பஸ்சை வழிமறித்து பஸ்சின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். திடீரென பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பிய பாக்கெட்டை பஸ் மீது வீசி தீ வைக்க முயற்சித்தனர். பொதுமக்கள் வேகமாக செயல்பட்டு தீ பிடிக்காமல் தடுத்தனர். மேலும், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் அசம்பாவிதங்களைத் தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளதாக டி.ஜி.பி. அசோக்குமார் தெரிவித்தார். சென்னையிலும் போலீசாரை உஷார் படுத்தி கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் தொடர்புள்ள நிறுவனங்கள், ஓட்டல்கள், சுற்றுலா அலுவலகம் போன்றவற்றில் போலீசார் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளனர். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் உருட்டுக்கட்டையுடன் நுழைந்த சிலர், திருப்பதி, சித்தூர், நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஐதராபாத் போன்ற ஊர்களுக்குச் செல்லும் ஆந்திர மாநில பஸ்களை குறிவைத்து தாக்கினர். 8 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பஸ்களை உடைத்ததாக, தமிழக முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த பாலன், அதியமான் என இருவர் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து சென்னையில் இருந்து ஆந்திராவுக்குச் செல்ல வேண்டிய அனைத்து பஸ்களும் நேற்று இரவு ரத்து செய்யப்பட்டன. ஆந்திராவில் இருந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வரவேண்டிய ஆந்திர மாநில பஸ்களும் நேற்று இரவு நிறுத்தி வைக்கப்பட்டன.