நாகூர் ஹனீபா மரணம்: சீமான் இரங்கல்!

நாகூர் ஹனீபா மரணத்துக்கு  நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் இரங்கல்தெரிவித்துள்ளார்.

அதில்,

கணீர்க் குரலால் தமிழுலகைக் கட்டிப் போட்டு வைத்திருந்த பாடகர் அய்யா நாகூர் ஹனீபா அவர்கள். தந்தை பெரியாரின் பற்றாளராக அறிஞர் அண்ணாவின் வார்ப்பாக திராவிட இயக்கத்தில் காலூன்றிய அய்யா ஹனீபா அவர்கள், தன்னுடைய தனித்த குரலால் தமிழர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ‘இறைவனிடம் கையேந்துங்கள்… அவர் இல்லையென்று சொல்லுவதில்லை…’, ‘அழைக்கின்றார் அழைக்கின்றார் அண்ணா’ உள்ளிட்ட எண்ணற்ற பாடல்களை உரக்கக் குரலில் பாடி ஒவ்வொரு குக்கிராமத்துக்கும் தனது கருத்தைக் கொண்டு சென்றவர் அய்யா ஹனீபா அவர்கள். இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமெடுத்த காலகட்டத்தில் தனது குரலையே ஆயுதமாகக் கொண்டு போராடியவர்.

 “ செந்தமிழை மேயவந்த

    இந்தி என்ற எருமை மாடே! முன்னம் போட்ட சூடு என்ன மறந்ததோ உனக்கு? என்றும் இந்தி ஏற்கமாட்டோம் ஓடிப்போ வடக்கு!”

என அய்யா பாடிய உணர்ச்சிமிகு பாடலைத் தமிழுலகம் என்றைக்கும் மறக்காது. சிம்மக் குரலால் சீரிய கருத்துகளால் தமிழ் மக்கள் மனதில் அழுத்தமாக இடம் பிடித்த அய்யா நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு தமிழ் உலகுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அய்யா அவர்களின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது. அய்யா அவர்கள் மறைந்தாலும் காற்று முழுக்கக் கலந்திருக்கும் அவருடைய கம்பீரக் குரல் என்றைக்கும் மறையாது.

என்று கூறியுள்ளார்.