
அருப்புக்கோட்டை அருகே, தனியார் பேருந்தின் டயர் வெடித்து விபத்து. தாறுமாறாக ஓடிய பேருந்து உணவகத்திற்குள் புகுந்தது!
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடியில் இருந்து மதுரைக்கு, தனியார் பேருந்து ஒன்று இன்று பிற்பகல் சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் மாரிமுத்து பேருந்தை இயக்கி வந்தார். பேருந்தில் 30 பயணிகள் இருந்தனர்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள பாலவனத்தம் ஊருக்குள் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்பக்க டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக ஓடி, அந்தப்பகுதியில் இருந்த உணவகத்திற்குள் புகுந்தது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த ஒரு பெண், ஒரு ஆண் காயமடைந்தனர். உணவகத்தில் இருந்த எரிவாயு சிலிண்டர் பேருந்தின் அடியில் சிக்கி கசிந்தது. உடனடியாக அருப்புக்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, எரிவாயு சிலிண்டரை அப்புறப்படுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
இந்த விபத்தில் உணவகம் முற்றிலும் சேதமடைந்தது. மேலும் உணவகத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களும் கடுமையாக சேதமடைந்தன. விபத்து குறித்து அருப்புக்கோட்டை தாலுகா காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.