நாகூர் ஹனீபாவின் சமூக நல்லிணக்கப் பாதை போற்றுதற்குரியது: திருமாவளவன்

நாகூர் அனிபாவின்  சமூக நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதே இளைய தலைமுறையினர் அவருக்குச் செலுத்தும் அஞ்சலி என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
 அவர் வெளியிட்ட இரங்கல் செய்தி…
 இசைமுரசு நாகூர் ஹனீபா அவர்களின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
சுயமரியாதை இயக்கத் தொண்டராய், இந்தி எதிர்ப்புப் போராட்ட வீரராய் தம் அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் நாகூர் ஹனீபா.  நீதிக்கட்சி, திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய திராவிட இயக்கங்களின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியவர். பட்டுக்கோட்டை அழகிரி, பெரியார், அண்ணா, கலைஞர், பேராசிரியர் ஆகியோரின் நேசத்திற்குரியவர். கண்ணியத் தலைவர் காயிதே மில்லத்தின் அன்பைப் பெற்றவர்.
தமிழக அரசியல் களத்திலும், இஸ்லாமியப் பண்பாட்டுத் தளத்திலும் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பாடல்கள் ஒலிக்காத திசைகளே இல்லை. அவர் குரல் கேட்காத கூட்டங்கள் இல்லை. அவரது பாடல்களில் உருகாத நெஞ்சங்கள் இல்லை. அவரது பாடல்கள் மதம் கடந்து சாதி கடந்து அனைத்துத் தரப்பினரையும் ஈர்த்தவையாகும். இறைவனிடம் கையேந்துங்கள் என்ற பாடல் இந்து மக்களால் கொண்டாடப்பட்ட பாடலாகும்.
தமிழகத்தில் சமயப் பூசல்கள் இன்றி சமூகங்களுக்கு இடையே அன்பும் அமைதியும் நிலவுவதற்கு ஹனீபாவும் ஒரு காரணம். தவத்திரு குன்றக்குடி அடிகளார், மதுரை ஆதீனம் போன்ற மடாதிபதிகளுடன் நட்புடன் இருந்து, இறுதி மூச்சுள்ளவரை சமூக நல்லிணக்கத்தைப் போற்றி வந்துள்ளார். அவருடைய இழப்பு சமூக நல்லிணக்கத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற ஒரு பேரிழப்பாகும். அவர் வளர்த்த சமூக நல்லிணக்கப் பாதையில் இளைய தலைமுறையினர் பயணிப்பதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாக இருக்க முடியும்.  அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம்.
என்றுகூறியுள்ளார்.