
‘மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும் மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பது சரியா?’ என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது கேள்விகள்:
‘ஆறுகளுக்கு குறுக்கே தடுப்பணைகள் கட்டுவோம்’ என்று சொன்னீர்களே என்னாச்சு?
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியது ஏன்?
80 சதவீத தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என்று மேடைக்கு மேடை பொய் சொன்னீர்களே… உண்மையை சொல்லுங்கள்; வாக்குறுதிகளை எப்போது தான் நிறைவேற்றுவீர்கள்?
மது ஒழிப்பு என்று நாடகம் போட்டுவிட்டு, ஆட்சியை அமைத்ததும், மக்கள் உயிரை பற்றி கவலைப்படாமல் மது விற்பனை செய்வது சரியா?
தமிழகத்தின் கனிமவளம், டன் கணக்கில் கடத்தப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதை தடுக்காதது ஏன்?
பள்ளி, கல்லுாரிகளில், 15,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாதது ஏன்?
ஆட்சி அமைத்ததில் இருந்து மூன்று முறை மின் கட்டணத்தை உயர்த்திவிட்டு, மின் வெட்டை சரி செய்யாதது நியாயமா?
தி.மு.க., ஹிந்துக்களின் விரோதி இல்லை என்று சொல்லிவிட்டு, கோவில்களை இடிப்பதும், ஹிந்துக்களின் உணர்வை புண்படுத்துவதும் வழக்கமாய் கொண்டிருப்பது சரியா?
தரமற்ற ஆரம்ப சுகாதார நிலையங்களாலும், அரசு மருத்துவமனைகளாலும், தமிழக மக்களின் உயிர் பறிபோவது உங்களுக்கு தெரியவில்லையா?
மத்திய அரசின் திட்டங்களுக்கு உங்கள் பெயரை, ‘ஸ்டிக்கராக’ ஒட்டுவதை எப்போது நிறுத்துவீர்கள்?