கிரானைட் முறைகேடு: மேலூரில் சகாயம் முன்னர் விசாரணை

மதுரை: கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சகாயம் குழு முன்னர் மேலூரில் விசாரணை நடைபெற்றது. மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் 11 ஆவது கட்ட விசாரணையை நடத்தி வருகிறார். கிரானைட் குவாரிகளில் காயம் அடைந்த ஊழியர்கள், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்த விவரம் தொடர்பாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு விசாரணை குழு சம்மன் அனுப்பி இருந்தது. அதன்படி மேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர்கள், ஊழியர்கள் சகாயம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் சகாயம், குவாரிகளில் காயம் அடைந்தவர்கள் குறித்தும், காயத்தின் தன்மை மற்றும் அதற்காக வழங்கிய சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விசாரணை நடத்தினார். அதன் பின்னர் மதுரை மாவட்டத்தில் கிரானைட் குவாரி உள்ள பகுதி கிராமங்களைச் சேர்ந்த 5 கிராம நிர்வாக அதிகாரிகள் சகாயம் முன்பு ஆஜரானார்கள். அவர்களிடம் அந்தந்தப் பகுதிகளில் உள்ள கிரானைட் குவாரிகளின் விவரங்கள், ஆக்கிரமிக்கப்பட்ட இடங்களின் அளவு போன்ற தகவல்களைக் கேட்டறிந்தார். இவை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சகாயம் கேட்டுப் பெற்றுக் கொண்டார்.