ரெப்கோ வங்கியில் மோசடிகளைக் களைய நடவடிக்கை எடுக்க திருமாவளவன் கோரிக்கை

ரெப்கோ வங்கியில் நடைபெறும் மோசடிகளைக் களைய தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்….

    சென்னை, தியாகராயநகர், வடக்கு உஸ்மான் சாலையில், தலைமை அலுவலகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் ரெப்கோ (ஸிணிறிசிளி) வங்கியில், பல்வேறு ஊழல்கள், முறைகேடுகள், பணியாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மக்கள் மத்தியில் செய்திகள் பரவியுள்ளது மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
இலங்கை, பர்மா போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து அகதிகளாக தாயகத்துக்கு வந்த தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் ரெப்கோ வங்கி. அகதிகளுக்கு மறுவாழ்வு கொடுக்கத்தான் இந்த வங்கி செயல்பட வேண்டும். ஆனால், மறுவாழ்வு கொடுக்க, தொழில்-வீட்டுவசதி மற்றும் வாழ்வாதாரம் உயர்ந்திடப் பாடுபட வேண்டிய வங்கி தற்போது வங்கி சட்ட விதிகளுக்கு முரணாகச் செயல்படுவது வருந்தத்தக்கதாகும்.
இந்த வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள தியாகராயநகர் தலைமை வங்கியில், முழு நிர்வாகத்தையும் நடத்தி வரும் உயர் அதிகாரிகளும், அவர்களுக்கு உடந்தையாக சிலரும் வங்கி சட்ட விதிகளுக்குப் புறம்பாக செயல்பட்டு வருவதும், இவர்களின் பழிவாங்கும் நடவடிக்கைகளால் பல நேர்மையான வங்கி ஊழியர்கள் பாதிக்கப்பட்டு நடுத்தெருவில் நிற்பதும் கண்டனத்துக் குரியதாகும்.
இந்திய அரசு ஊழியர்களின் பணிமுதிர்வு வயது 60தான். ஆனால், மேல்மட்டத்தின் துணையோடு 60 வயதைக் கடந்த நிலையிலும், மேலாண்மை இயக்குனர் திரு. வரதராஜன், செயல் இயக்குனர் திரு. ராஜேந்திரன் ஆகியோர் ரெப்கோ வங்கியில் தொடர்ந்து பணியாற்றி வருவது விதிகளை மீறிய குற்றமாகும்.  இந்த வங்கி, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய தென் மாநிலங்களில் மட்டுமே உள்ளது.  இதன் துணை நிறுவனமான, இந்தியாவெங்கும் இயங்கும் ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனம் கம்பெனி சட்டப்படி பதிவு செய்யப்பட்டுள்ளதால், மோசடிக்காரர்கள் மோசடிகள் செய்திட வசதியாக உள்ளது எனச் சொல்லப்படுகிறது.
இப்போது, பணிநியமனத்தின்போது, சட்டவிரோதமாக நடத்தப்பட்டு வந்த தேர்வு முறைக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்தும் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை. கடந்த மார்ச் 26ஆம் நாள் காலை சுமார் 12 மணிக்கே சென்னை உயர்நீதிமன்றம் பணிநியமன ஆணைக்கும், நேர்காணலுக்கும் தடையாணை விதித்த பிறகும், வங்கியின் நிர்வாகம் இரவு வரை நேர்காணல் நடத்தியிருப்பதாகத் தெரியவருகிறது. இது நீதிமன்ற அவமதிப்பாகும். இப்படி பல்வேறு வகையில்  ஊழல் செய்துள்ளதாகவும், முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வங்கியை தனியாருக்குத் தாரை வார்க்கத் தயாராக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடப் பாடுபட வேண்டிய ரெப்கோ வங்கி, ஊழல்வாதிகளின் கையில் சிக்கிக் கொண்டுள்ளதை மீட்டு மறு சீரமைப்புச் செய்திட மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், பழிவாங்கும் நோக்கத்துடன் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.  –  என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.