மதுரையில் பட்டப் பகலில் இந்தியன் வங்கி கிளையில் ரூ.10 லட்சம் பணத்தை கொள்ளை அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர் கொள்ளையர்கள்.
மதுரை கீழ ஆவணி மூலவீதி விளக்குத் தூண் பகுதியில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் இருந்து ரூ.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
திங்கள்கிழமை நேற்று வங்கியின் மாடியில் பணியாளர் ஒருவரின் பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சியில், சக ஊழியர்கள் அனைவரும் கீழிருந்து மேலே சென்று, மாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அப்போது, காசாளர் அறையில் இருந்த ரூ. 10 லட்சத்தை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்று கூறப் படுகிறது.
பணியாளர்கள் எவரும் இல்லாததை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காசாளர் அறையில் இருந்த ரூ.10 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டிருக்கிறது. வங்கியில் இருக்கும் சிசிடிவி கேமராவில் என்ன மாதிரியான காட்சிகள் பதிவாகி இருக்கிறது, யார் உள்ளே நுழைந்தது என்று இன்று காலை முதல் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சித்திரைத் தேர் நடைபெற்றது என்பதும், அந்தப் பகுதியில் அதிக அளவிலான மக்கள் கூட்டம் சென்று கொண்டிருந்தது என்பதும் குறிப்பிடத் தக்கது.