புதுச்சேரியில் துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் மோதலும், அதிகாரப்போட்டியும் நடைபெற்று வருகிறது.
துணை நிலை ஆளுநராக, சிலவற்றில் தனக்கு முழு அதிகாரம் உண்டு என்று கூறுகிறார் கிரண்பேடி. ஆளுங்கட்சியைக் கலந்து ஆலோசிக்காமல், சட்டமன்றத்திற்கு பாஜக.வைச் சேர்ந்த 3 பேரை நியமன உறுப்பினர்களாக அறிவித்தார். தொடர்ந்து, நேரடியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று பார்வையிடுவது, பொதுமக்களிடம் குறை கேட்பது, அதுகுறித்து ஆட்சியாளர்களிடம் கேள்வி கேட்பது என்று பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் ஆளுங்கட்சிக்கும் அவருக்கும் மட்டுமல்ல, பிற அரசியல் வாதிகளுக்கும் கூட நெருக்கடி அதிகரித்து, ஆளுநருக்கு எதிராக போர்க்கொடிதூக்கி வருகின்றனர். அவருக்கு எதிராக போராட்டங்களையும் அவ்வப்போது நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், வெகு நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டிருந்த இலவச அரிசி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்த போது, தூய்மையான கிராமம் என்ற சான்றிதழ் பெற்றால்தான் கிராம பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என அறிவித்தார். இது தேசிய அளவில் ஊடகங்களில் வெளியாகி, சர்ச்சை ஏற்பட்ட நிலையில், அந்த உத்தரவை இரவோடு இரவாக திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், முத்திரையர்பாளையத்தில் ஆய்வு செய்வதற்காக துணை நிலை ஆளுநர் கிரண்பேடி இன்று காலை வந்திருந்தார். அப்போது அவரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த காங்கிரஸார் முடிவு செய்திருந்தனர். அதன்படி, கிரண்பேடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.