நோயாளியை ஏற்றி வந்து மரத்தில் மோடி தீப்பிடித்த ஆம்புலன்ஸ்: 3 பேர் பலி

  ambulanceஈரோடு: நோயாளியை ஏற்றிக் கொண்டு வந்த ஆம்புலன்ஸ் ஒன்று, திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்ததில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் அருகே உள்ள நடுப்பாளையத்தைச் சேர்ந்த கதிர்வேல் (65) என்ற விவசாயியை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சொந்தமான ஆம்புலன்ஸில் அழைத்துச் சென்றனர். அந்த ஆம்புலன்ஸை சங்கர் என்பவர் ஓட்டிச் சென்றார். விவசாயி கதிர்வேலுடன் அவரது மனைவி லட்சுமி, மகன் பாலசுப்ரமணி, லட்சுமியின் தாய் செல்லம்மாள் ஆகியோரும் ஆம்புலன்ஸில் இருந்தனர். நள்ளிரவு நேரத்தில் ஆம்புலன்ஸ் ஈரோடு அருகே மொடக்குறிச்சி பகுதியில் சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த தென்னை மரத்தில் மோதி வேன் தலைக்குப்புற கவிழ்ந்தது. அப்போது ஆம்புலன்ஸ் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. ஆம்புலன்ஸ் தீப்பிடித்ததைப் பார்த்த கிராம மக்கள் ஓடி வந்து வேனை உடைத்து அதில் சிக்கியிருந்த கதிர்வேல் மற்றும் பாலசுப்ரமணியத்தை மீட்டனர். அதற்குள் ஆம்புலன்ஸ் வேன் முழுவதும் தீ பரவியது. இதில், ஓட்டுநர் சங்கர், லட்சுமி, செல்லம்மாள் ஆகியோர் உடல் கருகி பலியாயினர். காயமடைந்த இருவரும் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.