பக்தர்கள் புகார்…! சதுரகிரி மலையில் அறநிலையத்துறை ஆணையர் ஆய்வு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம் மதுரை

sathuragiri - 2026

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையாளர் பணீந்திரரெட்டி ஆய்வு செய்து வருகிறார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் அனைத்து அமாவாசை மற்றும் பௌர்ணமி காலங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர்.

இக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமடங்களின் அன்னதானக் கூடங்களின் மூலம் அன்னதானம் வழங்கபட்டு வந்த நிலையில், சுகாதார காரணங்களை காட்டி அனைத்து அன்னதான மடங்களையும் அறநிலையத்துறை மூட உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அமாவாசை வழிபாட்டுக்காக அங்கு திரண்ட பக்தர்கள் உணவு, குடிநீர் கிடைக்காமல் தவித்துள்ளனர்.

அன்னதானக் கூடங்கள் இல்லாததால் அங்குள்ள தனியார் உணவு விடுதிகளில் இட்லி 20 ரூபாய், தோசை 100 ரூபாய், தண்ணீர் பாட்டில் 100 ரூபாய் என அதிரடியாக விலை உயர்த்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை அடுத்து மலை மீது உள்ள அன்னதான மடங்களை மூடச் செய்துவிட்டு தனியார் உணவு விடுதிகள் உணவுப் பொருட்களை மிக அதிக விலைக்கு விற்க வகை செய்யப்பட்டுள்ளதாக பக்தர்கள் புகார் அளித்தனர்.

மலைப் பாதையில் உள்ள தண்ணீர்த் தொட்டிகளை பக்தர்கள் அசுத்தப்படுத்துவதாகக் கூறி தண்ணீர் வினியோகத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர். எனவே சதுரகிரி மலைப்பாதையில் அடிப்படை வசதிகள் இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டது.

மேலும், வரும் அமாவாசை தொடங்கி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும், சதுரகிரி பக்தர்கள் முடிவு செய்திருந்தனர்.

இந்நிலையில், பக்தர்களின் புகார்கள் தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.