சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்: வைகோ

சென்னை:
சத்துணவுப் பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்என்று ம திமுக பொதுச் செயலர்  வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று அவர் வெளியிட்ட அறிக்கை…
தமிழ்நாடு முழுவதும் உள்ள 42 ஆயிரம் சத்துணவு மையங்களில் பணிபுரியும் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட சத்துணவுப் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊதிய உயர்வு, ஓய்ñதியம், காலி பணியிடங்களை நிரப்புதல், பணி நிரந்தரம், வரையறுக்கப்பட்ட ஊதியம், பணிக்கொடை போன்ற 34 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தமிழ்நாடு சத்துணவுப் பணியாளர்கள் சங்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தது. அரசின் சார்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படாததால் சத்துணவு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதுடன், சிறை நிரப்பும் போராட்டத்திற்கும் தயாராகி வருகின்றனர். சத்துணவுப் பணியாளர்களின் போராட்டத்தால் அரசு பள்ளிகள், அங்கன்வாடி மையங்களில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணாமல், ஊழியர்களை மிரட்டுதல், பணியிடை நீக்கம் செய்தல் போன்ற நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கியுள்ளது கண்டனத்திற்கு உரியது ஆகும். சத்துணவு மையங்களில் வெளியாட்களை வைத்து பணிகளை தொடர சமூக நலத்துறை ஏற்பாடு செய்து வருவது பிரச்சனைக்கு தீர்வு ஆகாது. சத்துணவுப் பணியாளர்கள் சிறப்பு காலமுறை ஊதியம் என்ற பெயரில் சொற்ப ஊதியம் பெற்று வருகின்றனர். சுமார் 55 லட்சம் குழந்தைகளுக்கு மதிய உணவு அளித்து வருகின்ற சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்காமல் ‘சத்துணவுப் பணியாளர்களின் வேலை நிறுத்தத்தால்’ எந்த பாதிப்பும் இல்லை என்று தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கூறுவது அரசின் அலட்சியப் போக்கை பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளின், அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுகின்றபோது அதிமுக அரசின் அணுகுமுறை தொழிலாளர் நலனுக்கு எதிராகவே இருந்து வருகின்றது.
கடந்த மாதம் சர்க்கரை ஆலைத்தொழிலாளர்கள் ஆறாயிரம் பேர் போராட்டத்தில் இறங்கியபோதும், போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டத்தின் போதும் அதிமுக அரசின் எதேச்சதிகாரப் போக்கு வெளிப்பட்டது. அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து 42 தொழிற்சங்கங்களுடன் ஆறு கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தமிழக அரசு, அனைத்துத் தொழிற்சங்க பிரநிதிகளின் இசைவை பெறாமல், 5.5 விழுக்காடு ஊதிய உயர்வு என்று முடிவு செய்து, ஆளும் கட்சி தொழிற்சங்கம் மற்றும் சில தொழிற்சங்கங்களின் ஒப்புதலுடன் பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டது. போக்குவரத்து தொழிற்சங்கங்களின் ஒருமித்த ஆதரவை பெறாமல், தமிழக அரசு ஊதியமாற்று ஒப்பந்தத்தை இறுதி செய்ததால் முக்கிய தொழிற்சங்கங்கள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர். தமிழ்நாடு அரசின் அலட்சியப் போக்கால் போக்குவரத்துத் தொழிலாளர்களின் போராட்டம் மீண்டும் தீவிரமாகும் நிலை உருவாகியுள்ளது. கோடை விடுமுறைக் காலத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இறங்கினால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
தமிழக அரசு சர்வாதிகார மனப்பான்மையை கைவிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சத்துணவு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களின் ஊதிய மாற்று ஒப்பந்தத்தையும், மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.