தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தும் மூடிக் கிடக்கும் வண்டலூர் மகளிர் காவல் நிலையத்தை செயல்பட்டுக்கு கொண்டுவர பொதுமக்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
தாம்பரம் மாநகர காவல் ஆணையரகம் தொடங்கப்பட்ட பின் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையம் மட்டும் செயல்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் வசதிக்காக வண்டலூர் மற்றும் சேலையூரில் புதிதாக அனைத்து மகளிர் காவல் நிலையம் கட்டப்பட்டது.
இதனை கடந்த ஜூன் மாதம் 16-ம் தேதி, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலிக் காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். அதன்படி வண்டலூர் மகளிர் காவல் நிலையத்தில் பீர்க்கன்காரணை, ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர் பகுதிகள் காவல் நிலைய எல்லையாக வகுக்கப்பட்டன.
தற்போது இங்கு ஆய்வாளர் உள்ளிட்ட போலீஸார் நியமனம் செய்யப்பட்டும் யாரும் இதுவரை பதவி ஏற்கவில்லை. இதனால் காவல் நிலையம் பயன்பாட்டுக்கு வராமல் மூடியே கிடக்கிறது. இதனால் புகார் அளிக்கச் செல்லும் பெண்கள் பூட்டிக் கிடக்கும் காவல் நிலையத்தை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, தாம்பரம் காவல் ஆணையரகத்தின் அனைத்து பகுதிகளிலும் மகளிர் காவல் நிலையம் திறக்க அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் பற்றாக்குறை காரணமாக பயன்பாட்டுக்கு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படுகிறது. விரைவில் செயல்பட்டுக்கு வரும் என்றார்.