வாணியம்பாடியில் பாஜக., கடையடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

வேலூர்:

வாணியம்பாடியில் பாஜக மாநில நிர்வாகி மீது வன்முறைக் கும்பல் கொலைவெறித் தாக்குதல் நடத்தியதில் அவர் பலத்த காயமடைந்தார். இதைக் கண்டித்து பாஜகவினரும், பொதுமக்களும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம், வாணியம்பாடியை அடுத்த வெள்ளக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவபிரகாசம் (55). பாஜகவின் இந்து அறநிலையப் பிரிவின் மாநிலச் செயலாளராகவும், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார். திருமணமாகாத இவர் கட்சிப் பணியில் முழுநேரமாக ஈடுபட்டு வருகிறார். இவர் வெள்ளிக்கிழமை காலை வாணியம்பாடியில் உள்ள விநாயகர் கோயிலில் வழிபட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது 6-க்கும் மேற்பட்டோர் சிவபிரகாசத்தை வழிமறித்து இரும்புக் கம்பியால் தாக்கினர். பலத்த காயமடைந்த அவரை அருகிலுள்ள சாக்கடைக் கால்வாயில் தள்ளி விட்டனர்.

இந்த கொலைவெறித் தாக்குதலில் சிவபிரகாசத்தின் தலை, வயிறு, கால்கள் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் ஓடி வந்ததைக் கண்ட மர்மக் கும்பல் அங்கிருந்து வாகனங்களில் தப்பிச் சென்றது. கால்வாயில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்த சிவபிரகாசம் ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தகவலறிந்த பாஜகவினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் கூடினர்.

தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி சுப்பிரமணியம் (பொறுப்பு), காவல் ஆய்வாளர் பழனி, போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் நகர பாஜக தலைவர் சிவகுமார் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர், தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே மறியலில் ஈடுபட்டனர்.

சிறிது நேரத்தில் பாஜக மாவட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமையிலான நிர்வாகிகள், விஜயபாரத மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் கோ.ஸ்ரீ.ஜெய்சங்கர், பாஜக, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பேருந்து நிலையம் அருகே திரண்டு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். தாக்கியவர்களை கைது செய்யவேண்டும்மென கேட்டு சாலை மறியலில் ஈடுப்பட்ட இந்து அமைப்புகளை சார்ந்தவர்கள் இன்று 2ந்தேதி வாணியம்பாடி நகரில் முழு கடையடைப்புக்கு அழைப்பு விடுத்தனர். அதன்படி இன்று காலை முதலே பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விஜய பாரத கட்சி தலைவர் ஜெய்சங்கர் உட்பட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 25 பேரை போலீஸார் வீட்டுக் காவலில் வைத்தனர். வாணியம்பாடி மருத்துவனையில் சரியான சிகிச்சை அளிக்கவில்லையென வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிவப்பிரகாசத்தை மாற்றியுள்ளனர். வடக்கு மண்டல ஜ.ஜீ மஞ்சுநாதா தலைமையில் ஆயிரம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் வாணியம்பாடி நகரமே பதட்டமாக காணப்பட்டது.