நீரா பானம் இறக்க விண்ணப்பிக்கலாம்: திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை நலவாழ்வு பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்

திருப்பூர்:

தென்னை விவசாயிகள், நிறுவனமாகவோ, கூட்டு றவு சங்கமாகவோ இணைந்து, நீரா இறக்க அனுமதி கேட்டு விண்ணப்பிக்கலாம்; ஏப்.,1 முதல், நீரா இறக்க அனுமதி வழங்கப்படும் என, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில், 60 ஆயிரத்து, 147 எக்டரில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து கள் இறக்க அனுமதி கேட்டு, விவசாயிகள், பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். கேரளாவில் இருப்பது போல், ‘நீரா’ இறக்க அனுமதிக்க வேண்டும் என்று கேட்டனர்.

விவசாயிகளின் கோரிக்கைகளை பரிசீலித்த தமிழக அரசு, ‘நீரா’ பானம் இறக்க அனுமதி வழங்கியுள்ளது.’நீரா’ தயாரிக்க விரும்பும் தென்வை விவசாயிகள், உற்பத்தி நிறுவனமாகவோ, கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ, அதை உற்பத்தி செய்யலாம். மாவட்டத்தில், கலால் உதவி கமிஷனர், மாவட்ட பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீரா தயாரிப்புக்கு, அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி, படிவம்- 1 மற்றும் படிவம் -2 அல்லது, உதவி கமிஷனர் (கலால்) மூலமாக, கலெக்டருக்கு விண்ணப்பிக்க வேண்டும். கலெக்டர் மூலமாக, நீரா இறக்க, படிவம் – 3; நீரா எடுத்து செல்ல, விற்பனை செய்ய, படிவம் -4ல் அனுமதி வழங்கப்படும். ஒட்டுமொத்தமாக, கலெக்டர் மூலம் உரிமம் வழங்கப்படும்.

கலெக்டர் வழங்கும் உரிமத்தை, ஏப்., முதல், அடுத்தாண்டு மார்ச், 31 வரை பயன்படுத்த முடியும். பின், ஒவ்வொரு ஆண்டும் உரிமத்தை புதுப்பித்துக் கொள்ளலாம். தென்னை விவசாயிகள் அல்லது சங்கத்தின் உறுப்பினராக உள்ள விவசாயிகளின் மொத்த தென்னை மரங்களில், 5 சதவீத மரத்தில் அல்லது, மொத்த குழு உறுப்பினர்களின் மொத்த மரங்களில், 40 ஆயிரம் மரங்களில், ‘நீரா’ இறக்க அனுமதி வழங்கப்படும்.

உரிமம் வழங்கப்பட்டதும், உதவி கமிஷனர் மற்றும் தாசில்தார் குறியீடு செய்யும் மரங்களில் மட்டும், நீரா இறக்க முடியும். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தென்னை விவசாயிகள், நிறுவனமாக பதிவு செய்து, ‘நீரா’ தயாரிப்புக்கு உரிய படிவங்களில் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான சந்தேகங்களுக்கு, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைக்குழு துணை இயக்குனர் மற்றும் உதவி கமிஷனர் (கலால்), கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஆகியோரை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.