
ஊட்டி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி தாக்கி பெண் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்பகுதி மக்கள் இன்று பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி மாவட்டத்தில் ஊட்டி மில் இருந்து கூடலூர் முதுமலை மைசூர் சாலை மற்றும் அருகில் உள்ள கிராமங்களில் புலிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக் காட்டில் புலி தாக்கியதில் பெண் பலியான சம்பவம் நடந்துள்ளது.
தெப்பக்காடு பகுதியில் வீட்டருகே உள்ள காட்டிற்கு நேற்று மாரி (50) என்ற பெண் சென்றாராம்.இரவு வீடு திரும்பவில்லை. உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இன்று காலையில் மீண்டும் தேடியுள்ளனர். இந்த நிலையில் புலி தாக்கி உடல் சிதைந்த நிலையில் மாரி சடலம் கிடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் மக்கள் திரண்டனர்.
வனத்துறையும் காவல் துறையினரும் உடற்கூறு பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவ மனைக்கு சடலத்தை கொண்டு சென்றனர்.

இந்த நிலையில் முதுமலை ஊராட்சி தெப்பக்காட்டில் புலி தாக்கிய சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
அவர்களிடம் அரசுதுறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறி மறியல் போராட்டத்தை கைவிடச்செய்தனர்.