கட்சி தொடங்காத ரஜினி! பொறுத்துப் பொறுத்துப் பார்த்து… வேறு கட்சிகளில் இணைந்த மக்கள் மன்றத்தினர்!

Published:

krishnagiri rajini makkalmandram - 2026

நடிகர் ரஜினி காந்த் இரு வருடங்களுக்கு முன்னர் தாம் தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாகக் கூறினார். இதனால் அவரது ரசிகர்கள் சுறுசுறுப்படைந்தனர். ரஜினி ரசிகர் மன்றம், ரஜினி மக்கள் மன்றம் என பெயர் பெற்றது. இதை அடுத்து, மக்கள் மன்றத்தில் இணைய பலரும் ஆர்வம் காட்டினர்.

அரசியலில் உள்ளூர் வட்ட மாவட்டப் பொறுப்புகளில் அமர்ந்தால், ஏதோ நாலு காசு சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் பொதுவாகவே பலருக்கும் உண்டுதான். ஆனால், இதோ இதோ என்று போக்குக் காட்டி வந்த ரஜினி, மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையிலும் கூட அரசியல் களத்தில் குதிக்காமல், குளத்தின் கரையில் நின்றபடி கல்லெறிந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது நடிகர் அவதாரம் எடுத்து அந்தக் குளத்து நீரில் முகம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அதே நேரம், அரசியல் ஆசை இருந்தால், மக்கள் மன்றத்தில் இருக்க வேண்டாம் என்று அன்பு வேண்டுகோளும் விடுத்தார்.

krishnagiri rajini makkalmandram1 - 2026

இந்நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து எவ்வளவு வேகத்தில் இணைந்தார்களோ அவ்வளவு வேகத்தில் வெளியேறி வருகின்றனர் அரசியல் ஆசையுடன் இணைந்தவர்கள். நேற்று திமுகவில் ரஜினி மக்கள் மன்ற கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் இணைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தமாக கலைந்தது ரஜினி மக்கள் மன்றம்!

மன்றத்தின் பெரும்பாலான நிர்வாகிகள் உட்பட 500 பேருடன் கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளர் மதியழகன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

ரஜினிகாந்த் பிறந்த நாச்சிகுப்பம் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து ரஜினி மக்கள் மன்றம் கலைய துவங்கி உள்ளது பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அடுத்த முக்கிய நிர்வாகி அதிமுகவிற்கு தாவலாம் என்ற தகவல் மேலும் பரபரப்பை கூட்டி உள்ளது.

WhatsApp Image 2019 02 08 at 21.13.31 - 2026

இதனிடையே, கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளராக இருந்து வந்த மதியழகன் ரஜினி மக்கள் மன்றத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து உடனடி நீக்கப்பட்டிருக்கிறார்.

மாவட்ட இணை செயலாளர் சீனிவாசன் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் பொறுப்புக்கு இன்று முதல் அன்பு தலைவரின் ஒப்புதலுடன் நியமிக்கப்படுகிறார். நியமிக்கப்பட்ட மாவட்ட செயலாளருக்கு ரஜினி மக்கள் மன்றத்தின் அனைத்து ஒன்றிய நகர நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் முழு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று விஎம் சுதாகர் நிர்வாகி கையெழுத்திட்டு ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டது!

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img