ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நீதிபதி வீட்டின் மீது கல்வீச்சு சம்பவம் நடந்ததன் எதிரொலியாக, தமிழகத்தில் அனைத்து நீதிபதிகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க, உள்துறை முதன்மைச் செயலருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி எம். பிரகாசன் வீட்டில் புதன்கிழமை மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில், நீதிபதியும் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில், நீதிபதிகள் எஸ். தமிழ்வாணன், வி.எம். வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு, தாமாக முன்வந்து வெள்ளிக்கிழமை வழக்கை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: நீதிபதி வீடு மீது நடத்திய தாக்குதல் சம்பவம் என்பது நீதித் துறையின் சுதந்திரத்துக்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நீதித் துறையின் சுதந்திரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சம்களில் ஒன்றாகும். சட்டத்தை செயல்படுத்தவும், ஜனநாயகம் தழைக்கவும் நீதித் துறையில் சுதந்திரம் அவசியமாகிறது. உச்ச நீதிமன்றம் பல்வேறு தீர்ப்புகளில் இதைத் தெளிவுபடுத்தியுள்ளது. சம்பவம் நடக்கவிருப்பதை உளவுப் பிரிவு போலீஸார் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கத் தவறியுள்ளனர். பொதுமக்கள் தங்களின் உரிமைகளை நீதிமன்றங்கள்தான் காப்பாற்றுகின்றன என்று நம்புகின்றனர். நீதிபதிக்கே அச்சுறுத்தல் ஏற்படுமானால், நீதிமன்றங்களுக்கு வரும் சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என்று கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. சம்பந்தப்பட்ட நீதிபதியின் உயிருக்கு சமூக விரோதிகளால் ஆபத்து இருப்பதாகத் தெரிகிறது. எனவே, அவருக்கு ராமநாதபுரம் எஸ்.பி. உடனடியாக உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். அவரது வீட்டில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். மாநிலத்தில் உள்ள அனைத்து நீதிபதிகளுக்கும், குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை உள்துறை முதன்மைச் செயலர் மற்றும் டி.ஜி.பி. ஆகியோர் செய்யவேண்டும். மேலும், சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்யவேண்டும்… – என்று உத்தரவிட்டனர்.

