
தென்காசி அருகே கீழப்பாவூரில் உள்ள ருக்மணி சத்தியபாமா சமேத வேணுகோபால கிருஷ்ணசுவாமி கோவிலில் பவித்ரோத்ஸவ விழா நான்கு நாட்கள் நடந்தது.
முதல் நாளில் புண்ணியாக வாசனம், பகவத் பிரார்த்தனை, வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம் நடைபெற்றது. 2-வது நாளில் விசேஷ திருமஞ்சனம், பட்டு நூலான பவித்திரமாலை பிரதிஷ்டை, சுவாமி சயன சேவை, விசேஷ ஹோமம், வேதபாராயணம் உள்ளிட்டவையும், 3-வது நாளில் பவித்ரோத்ஸவ ஹோமம், பெருமாள் மற்றும் கருடாழ்வாருக்கு பவித்ரமாலை சமர்ப்பணம், சுவாமி வீதியுலா, தீபாராதனை நடந்தது. நிறைவு நாளன்று காலையில் கும்பஜெபம், அனைத்து திரவியங்களால் அபிஷேகம், தீபாராதனை, மாலையில் புஷ்ப யாகம், அனைத்து பூக்களால் ஹோமம், 12 முறை யாகம், 12 முறை தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரவி பட்டாச்சாரி தலைமையில் விழா குழுவினர் செய்திருந்தனர்.