சென்னை:
தூத்துக்குடி மாவட்டம் பெருங்குளம் செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் மகா சமாதி அடைந்தமைக்கு இந்து முன்னணி சார்பில் அஞ்சலி தெரிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஷ்ரீவைகுண்டம் தாலுகா பெருங்குளம் பகுதியில் எழுந்தருளியிருந்த திருக்கயிலாயப் பரம்பரை செங்கோல் ஆதினத்தின் 102வது குரு மகா சந்நிதானம் சீர்வளர் சீர் கல்யாண சுந்தர தேசிக சத்தியஞான சுவாமிகள் நேற்று மாலை முக்தி அடைந்தார். அவருக்கு இந்து முன்னணி சார்பில் மாநிலத் துணைத் தலைவர் வி.பி. ஜெயகுமார் அவர்கள் இறுதி மரியாதை செலுத்தினார்.
குருமகா சந்நிதானத்திற்கு இந்து முன்னணி சிரம் தாழ்த்தி அஞ்சலியைச் செலுத்துகிறது. தமிழகம் ஆன்மீக பூமியாக விளங்க, தமிழ் தழைத்தோங்கு ஆதினங்களும், திருமடங்களுமே அஸ்திவாரமாக இருந்து தொண்டாற்றி வருகின்றன. இதில் மிகவும் பழமையான ஆதினங்களில் ஒன்றான செங்கோல் ஆதினத்தின் கர்த்தராக இருந்த சுவாமிகள் ஆன்மிகத்திற்கு பெரும் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
குருமகா சந்நிதானம் மகா சமாதி அடைந்ததற்கு இந்து முன்னணி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
– என்று அந்த அஞ்சலிக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



