மதுரை:
தடையை மீறி ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த முயன்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்டார்.
ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்தால், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு இல்லாமல் பொங்கல் பண்டிகை நடந்து முடிந்தது. இருப்பினும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மதுரை மாவட்டத்தில் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் தடையை மீறி மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
இதை அடுத்து மதுரை மாவட்டத்தில் இன்று, போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பாலமேட்டில் காளைகளை அவிழ்த்து விடும் வாடிவாசல் பகுதியிலும் ஆயுதம் தாங்கிய போலீசார் நிறுத்தப்பட்டனர். முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் இரவோடு இரவாக கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை வந்தார். இன்று காலை அவர் தங்கியிருந்த பைபாஸ் ரோடு விடுதிக்குச் சென்ற போலீசார், அங்கிருந்து வெளியே வந்த சீமானை தடுத்து நிறுத்தினர். அப்போது போலீசாரிடம், தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினால்தான் எங்களை கைது செய்ய வேண்டும். இப்போது நான் பாலமேடு செல்கிறேன் எனக் கூறினார் சீமான்.
இதை அடுத்து, அங்கிருந்த புறப்பட்ட சீமான், செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்கள் அமைப்பின் புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் 20 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். எந்தத் தடையையும் மீறி ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்றார். இந்நிலையில் மதுரை அருகே உள்ள பாசிங்காபுரம் பகுதியில் அவரது காரை தடுத்து நிறுத்திய போலீசார் சீமானைக் கைது செய்தனர். அவருடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.



