விரைவில் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியாகவிருக்கும் பிச்சைக்காரன் படத்தின் விளம்பரப்பாடலில் இடம்பெற்ற வரிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாடலின் சில வரிகள் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் மீதான நம்பிக்கை பற்றியும் மிகவும் தவறான பார்வையை முன் வைப்பதாக பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
விஜய், அஜித் உள்ளிட்ட நட்சித்திர ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென ஒரு இடத்தை பிடித்த விஜய் ஆண்டனி, நான் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இவர் நடித்த சில படங்களும் வெற்றியடைந்தது. இவர், வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், அவருடைய சொந்த நிறுவனம் தயாரிக்கும் பிச்சைக்காரன் எனும் படத்தில் அவர் ஹீரோவாக நடித்தும், இசையமைத்தும் உள்ளார். இந்தப் படம் சில நாட்களில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் கிளாமர் சாங் என்னும் விளம்பரப் பாடலில் சர்ச்சைக்குரிய வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.
அந்தப் படத்தின் பாடல்கள் சில நாட்களுக்கு முன் வெளியாகியது. அதில் கிளாமர் சாங் என்ற அடைமொழியுடன் விளம்பரப்பாடல் வெளியாகியுள்ளது.
அந்தப் பாடலில் இட ஒதுக்கீடு குறித்தும், மருத்துவர்கள் குறித்தும் சர்ச்சையை ஏற்படுத்தும் வார்த்தைகள் அதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடலைக் கேட்ட மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் விஜய் ஆண்டனிக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.



