December 6, 2024, 8:36 PM
27.6 C
Chennai

என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?

அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!
ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!
தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வியாபார நிலை, விலை நிலவரம் எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் அரிசி வாங்கும் கடைக்குச் சென்றேன். முகத்தை தொங்கப் போட்டிருந்தார் அந்தத் தாத்தா! என்னைக் கண்டதும் என்ன சார் எப்படி இருக்கீங்க? என்று என்னிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு விசாரிக்க வாயெடுத்தால்… சரளமாக வந்தது அன்னாரிடம் இருந்து!
என்ன சார் பண்றது? அரிசி மூட்டையா குமிச்சி வெச்சிருப்பேன்… இப்ப பாருங்க..? லோடு டம்ப் பண்ண முடியலே! வியாபாரமும் டல்! போன மாசம் இட்லி அரிசி 20 ரூபாய்க்கு இருந்தது. இப்போ 33ம் 35ம்! பிரியாணி அரிசி நிறைய வாங்குவாங்க… இப்போ கிலோ ரூ.120. நீங்க வழக்கமா வாங்கற 42 ரூபாய் பச்சரிசி இன்னிக்கு ரூ.56. எப்படி போடட்டுமா உங்களுக்கு…? என்றார்.
போடுங்க … போடுங்க…  என்றேன்.
பின்னர் பச்சரிசி புழுங்கரிசி என்று எல்லா அரிசி விலை நிலவரத்தையும் விசாரித்தேன். குறைந்தது, கிலோவுக்கு ரூ. 8ல் இருந்து 14 வரை உயர்ந்திருக்கிறது. அதுவும் குறுகிய காலத்தில்!
பொதுவாக தை மாதம் பிறந்தால் விலை குறையும்! ஆனால்.. இப்போது  எகிறிப் போயுள்ளது!
காவிரி நீர் இன்மை, பருவ மழை பொய்த்தது, விவசாயிகளுக்கான ஊக்கம் இல்லாதது, வெளி மாநில வரத்தை நம்பியிருப்பது… இப்படி பல காரணங்கள் இருந்தாலும்….
கடந்த பத்து வருடங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வரும் சில காரணிகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது…
* இளைய தலைமுறை – கணினி தொடர்பான வேலைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது! விவசாயம் சார்ந்த, உணவுப் பொருள் சார்ந்த அறிவியல் ரீதியான நவீன வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாதது!
* சில வருடங்களுக்கு முன்னர் டபிள்யுடிஓ வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து நாம் அதிகம் பேசியபோது, ஐ.நா.வின் ஜெனீவா மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாய இடுபொருள்கள், உரங்கள் உள்ளிட்டவற்றுக்கு மானியத்தை அதிகப் படுத்திக் கொண்டு, வளரும் நம் போன்ற நாடுகளுக்கு விவசாய மானியங்களைக் குறைக்குமாறு வலியுறுத்தியது… இது எப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பத்தாண்டுகளுக்கு முன்னர் நாம் அதிகம் விவாதித்தோம்! இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
* விளைபொருள்களை பாதுகாப்பதற்கான எந்த கட்டமைப்பையும் நம் அரசுகள் மேற்கொள்ளாதது. இன்று கூட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகள், குடோன்களில் அடுக்க வழியின்றி வெளியில் வைக்கப்பட்டபோது, மழைநீரில் நனைந்து வீணானது… எத்தனை மாத காலம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு நெற்கதிரையும் தடவிக் கொடுத்து ஆசையோடு அறுவடை செய்து விற்பனைக்கு வரும் நேரத்தில் இப்படி என்றால்… தவறு மழை என்ற இயற்கையினுடையது அல்ல! விவசாயிகளுக்கு இடம்தராமல் ஏஜெண்டுகளுக்கு இடம்தந்து கோல்மால் செய்யும் அதிகாரிகளுடையது… தகுந்த கட்டுமான ஏற்பாடுகளைச் செய்துதராத அரசுகளுடையது!
* இந்த ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேணாம் வேணாம்… என்று அடித்துக் கொண்டாலும், கேட்பார் யாருமில்லை! விளை நிலத்தை மலடாக்கிப் போட்டு வைத்து, மனைப் பிரிவாக்கி, விவசாயத்தைப் பாழ்படுத்தி… இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?

ALSO READ:  Police arrests professor for harassing student to join for drinking session with an amorous intent, while other is on run!
author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
ALSO READ:  Thejas foundation arranged for a Gana and Jata parayanam in Chennai on Dec. 10th

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

  1. நண்பர் செங்கோட்டை ஸ்ரீ ராம் அவர்களின் விலைவாசி பற்றிய அருமையான பதிவு. எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    நன்றி திரு செங்கோட்டை ஸ்ரீ ராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week