சென்னை தாம்பரம் அருகே உள்ள பொழுதுபோக்கு கிஷ்கிந்தா பூங்காவில் ராட்சஸ ராட்டினம் அறுந்து விழுந்ததில் ஒருவர் பலியானார் . 20 பேர் காயமடைந்தனர்.
தாம்பரம் அருகே தர்காஸ் பகுதியில் பொழுதுபோக்கு, விளையாட்டுப் பூங்கா அமைந்துள்ள விளையாட்டு பூங்காவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலான எல்லா தரப்பினருக்கும் ஏற்ற வகையில் பொழுதுபோக்கு, விளையாட்டுகள் உள்ளன. சாகசம் நிறைந்த விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.
சென்னை அதனைச் சுற்றியுள்ள பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் விடுமுறை நாள்களில் பொழுதைக் கழிக்க இங்கே வருகின்றனர்.குறிப்பாக நீர்ச்சறுக்கு விளையாட்டு, நீரில் சவாரி செய்வது, ராட்சஸ ராட்டினங்களில் சவாரி செய்வது உள்பட பல விளையாட்டுகள் உள்ளன.
இங்கு நேற்று பணி நேரம் முடிந்து, பார்வையாளர்கள் வெளியேறிய பிறகு புதிதாக ஒரு ராட்சஸ ராட்டினம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்த ராட்டினம் அமைக்கப்பட்டவுடன், அங்கே பணி செய்யும் ஊழியர்களே ராட்டினத்தில் சவாரி செய்து ஒத்திகை பார்த்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சஸ ராட்டினம் அறுந்து விழுந்தது.

இதில் அங்கு பணி செய்த குன்றத்தூர் அருகே புதுநல்லூர் பகுதியைச் சேர்ந்த மணி (35) நிகழ்விடத்திலேயே பலியானார் . இந்த விபத்தில் 20 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவர் உடல் குரோம்பேட்டை அரசுப் பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சோமங்கலம் காவல் நிலையத்தினர் விசாரித்து வருகின்றனர்.




