October 9, 2024, 7:02 PM
31.3 C
Chennai

நாடகங்களில் வளர்ந்த தமிழிசை!

ஏன் பள்ளி கொண்டீரய்யா ஸ்ரீ ரங்க நாதா … ஏன் பள்ளி கொண்டீர் அய்யா?
இந்தப் பாடலைப் பாடிக் கேட்கும் போது உள்ளத்தில் எழும் மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் தமிழிசையின் மகத்துவத்தைப் பறைசாற்றும். தமிழிசை மூவரில் ஒருவரான அருணாசலக் கவிராயர் இயற்றிய இது ஏதோ ஒரு தனிப்பாடல் போலத் தோன்றுகிறது. ஆனால் உண்மையில் இது அவர் இயற்றிய ராம நாடகத்தில் உள்ள பாடல் அல்லவா?
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாண் ஆக்கி என்று பாடும்போது, இந்தப் பாடல் இடம்பெற்றிருக்கும் சிலப்பதிகார நாடகமும் நமக்கு நினைவில் வந்துவிடும்.
இப்படி எத்தனையோ தமிழ்ப் பாடல்களை, தமிழிசையை வளர்க்க நாடகங்கள் பெரிதும் உதவின. இவை அந்ததந்தக் காலத்துக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்தன.
இந்திய சுதந்திரப் போராட்டக் காலத்தில் எளியோர்க்கும் புரியும் வண்ணம் இசை அமைய வேண்டும் என்பதால், நாடகங்களில் தமிழ் முழக்கம் முழுதாய் நிறைந்தது. நாடகக் கலையை வளர்த்த எஸ்.ஜி.கிட்டப்பா, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரின் அமுத கானத்தைக் கேட்கவே நாடகக் கொட்டாய்களில் மக்கள் வெள்ளம் குவிந்ததுண்டு. குறிப்பாக, இசை ஏதோ மேட்டுக்குடி மக்களுக்கானது என்ற எண்ணத்தை விதைத்திருந்த காலத்தில், மேட்டுக்குடி மக்களையும் சாதாரண நாடகக் கொட்டாய்களுக்கு வரவழைத்தவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவரது சுண்டியிழுக்கும் குரல், மைக் செட் இல்லாமல் பல காத தூரத்துக்கு மக்களின் செவிகளில் இசையைப் பாய்ச்சி இழுத்து வந்தது. வள்ளி நாடகத்தில் காயாத கானகத்தே என்று கிட்டப்பா பாடிய தமிழிசைக்கு மயங்காதவர் உண்டோ? அன்றைய காலத்தில் காயக சிரோன்மணியாக வலம் வந்த ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதர், கிட்டப்பாவின் நாடகக் கொட்டாயில் முதல் வரிசையில் நின்று கேட்டு மயங்கினாரென்றால், நாடகத்தின் வலிமையை என்னென்பது?!
ராமநாடகம் போன்றே, அக்காலத்தே புகழ்பெற்று விளங்கியது நந்தனார் சரிதம் நாடகம். வேடன், வேலன், விருத்தன் என அனைத்திலும் நடித்து கதாபாத்திரங்களின் தன்மைக்கேற்ப பாடல்களைப் பாடி மேடைகளில் வெளுத்துக் கட்டியவர்கள் கிட்டப்பாவும் சுந்தராம்பாளும். நந்தனார் சரிதம் நாடகமும் இதற்குச் சற்றும் குறைவின்றி மக்களின் ஆதரவைப் பெற்றதே!
நாடகங்களை நடத்துவதற்கென்று, கூத்தர், பாணர் ஆகியோரை தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. இவர்கள் இசையில் வல்லவராகத் திகழ்ந்தனர்.
நாடகங்களில் சில மரபுகள் உண்டு. கட்டியக்காரன் இல்லாத சரித்திர நாடகம் இல்லை. சபையோர்க்கு இவர் வருகின்றார் என்று அறிவிக்கும் அறிவிப்பாளன் கட்டியக்காரன். பெரும்பாலான நாடகங்களில் விநாயகர், கலைமகள், மோகினிராஜன், மோகினி போன்றோரெல்லாம் நாடகத்தின் துவக்கத்தில் வருவார்கள். இந்த நாடகங்கள் வசனம், விருத்தம், கீர்த்தனம் என மூன்று அமைப்புகளைக் கொண்டிருந்தன. எல்லா நாடகங்களுமே இன்றைய காலத்தைப் போல் வெறும் வசனம் மட்டுமே கொண்டிருக்கவில்லை. கதாபாத்திரங்கள் இடையிடையே கீர்த்தனம் செய்வர். விருத்தங்களின் மூலம் முன்னர் நிகழ்ந்ததைச் சொல்வர். இந்த நபர் இந்த சம்பிரதாயத்துடன் வருகிறார் என்று அறிவிக்கும்படி கீர்த்தனங்களாய் அமைவது உண்டு. கட்டியங்காரன் நிகழ்ச்சிகளைச் சொல்லும்வகையில் பாடல்களாய்ப் பாடுவதும் உண்டு.
நாடக சம்பிரதாயத்தில் கீர்த்தனங்களுக்கு தரு என்று பெயர். சிந்து என்றும் கூறுவர். இந்த வசனம், கீர்த்தனம், விருத்தங்களில் மக்களின் வழக்குச் சொற்கள் அதிகம் கலந்திருக்கும். அதுதான் இவற்றின் வெற்றி. இந்த வகையில், குறவஞ்சி நாடகங்கள் அக்காலத்தே பிரபலமாகத் திகழ்ந்திருக்கின்றன. திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சியும் இவ்வகையில் தமிழிசைக்கு பலம் சேர்த்த குறவஞ்சி நாடகமே!
தமிழ்ப் பாடல்களால் நிறைந்த நாடகங்கள் பெரும்பாலும் தெருக்கூத்து வகையைப் போல், எளியோரைக் கவர்ந்தவையாக இருந்திருக்கின்றன.
அக்காலத்துப் பேச்சுநடை, பழமொழிகள், பழங்காலப் பொருள்களைப் பற்றிய செய்திகளும் பாடல்களிலே இருந்ததால், இவை வெறுமனே துதிப் பாடல்களாக அமையாமல் வாழ்க்கைப் பாடல்களாக அமைந்தன.
தமிழிசை துலங்கும் நாடகங்கள் பழங்காலம் முதற்கொண்டே மேடையேற்றப்பட்டு வந்தாலும், மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னர்
தஞ்சை நாயக்கர் காலத்தில் மீண்டும் உத்வேகம் கொண்டு புதிது புதிதாக வலம்வந்தன. அருணாசலக் கவியால் இயற்றப் பெற்ற மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம் என்ற நாடகம், நாராயண கவி என்பார் இயற்றிய பாண்டிய கேளீ விலாச நாடகம் ஆகியவை தஞ்சை நாயக்கர்களின் விருப்பத்துக்கு ஏற்ப இயற்றப்பட்டுள்ளன.
மதன சுந்தரப் பிரசாத சந்தான விலாசம் என்பது, மதன சுந்தரேசராகிய சிவபெருமானின் திருவருளால் பெற்ற குழந்தைகளின் விளையாட்டைச் சொல்லும் நாடகம் என்ற பொருளில் அமைந்தது. மதன சுந்தரேசரைக் குல தெய்வமாக உடைய சோழ மன்னன் ஒருவனின் பிள்ளைகள் நான்கு பேர் பலவிதமான விளையாடல்களைச் செய்வதும், சிவபெருமானை நோக்கி பக்தி செய்வதும், சோழனின் பிரார்த்தனைக்கு இரங்கி சிவபெருமான் எழுந்தருளி அந்தப் பிள்ளைகளுக்கு நலன்கள் பல அருள்வதுமாகிய செய்திகள் இந்த நாடகத்தில் கூறப்பட்டிருக்கும்.
இந்த சோழன்தான் என்று குறிப்பிடாமல், யாரோ ஒரு சோழனாக சோழேந்திரன் எனும் பெயரில் இவன் குறிப்பிடப்படுகிறான். சேரன், பாண்டியன், கொங்கு நாட்டரசன், கேரள நாட்டு அரசன் என நான்கு பேரின் புதல்வியரை மணந்து, நான்கு புதல்வர்களைப் பெற்று அவர்களுடன் சேர்ந்து விளையாடுகிறான் சோழேந்திரன்.
அப்போது, முதலில் கழற்சிக்காய் விளையாட்டைத் தொடங்கினர். எண்களை எண்ணி ஒன்றெனில் தெய்வம், இரண்டெனில் சக்தியும் சிவமும், மூன்றெனில் மும்மூர்த்திகள், நான்கு எனில் நால் வேதங்கள், ஐந்து எனில் ஐம்பூதங்கள், ஆறு எனில் சாத்திரங்கள் என… இவ்வாறாக எண்களை வைத்து பாடல்கள் இசைக்க விளையாடுகிறான். பின்னர் கழற்சிக்காய் ஊசல் என விளையாட்டு. பந்து அடிப்பது, குதிரைப்பந்து, பந்தை வீசுவதும் பிடிப்பதுமான விளையாட்டு, கிட்டிப் பந்து, கிட்டியினால் பந்தை அடிப்பது மற்றவர் எடுப்பது, பின்னர் பாண்டி விளையாட்டு… சில்லை வீசிக் காலால் ஏற்றி விளையாடுவது. பின் உப்புக்கோடு, நாலுமூலைத்தாச்சி, கண்ணாமூச்சி என விளையாட்டு தொடர்கிறது. பின்னர் நால்வரும் சேர்ந்து கொப்பி தட்டிப் பாடி விளையாடுவது. இது முடிந்தவுடன் மதன சுந்தரேசரைப் புகழந்து பாடுவது…
இவ்வாறு குழந்தைகள் விளையாடுவதைப் பார்த்து மகிழ்ந்த அரசன், பெருமானை பிரார்த்தனை செய்து, இவர்களுக்கு தீர்க்காயுளும் மற்ற நலன்களும் கிட்ட வேண்டும் என்று வேண்ட, அவன் பக்திக்கு இரங்கிய பரமன் காமசுந்தரி அம்பிகையுடன் தோன்றி வரம் அருள்கிறான். இவ்வாறு இந்த நாடகம் முடிவடைகிறது.
கணபதி காப்புடன் தொடங்குகிறது இந்த நாடகம். பின்னர் ஹரிகதா போன்று, கதாசங்கிரகம் என்ற பெயரில் முன்கதைச் சுருக்கமாக சொல்லப்படும். கதை சொல்பவர்கள் கதை முழுதும் அமையும் ஒரு பாடலைப் பாடுவார்கள். அதை நிரூபணம் என்று சொல்வார்கள். இதே பாணியில்தான், கோபாலகிருஷ்ண பாரதியார் நொண்டிச் சிந்தில் கதைச் சுருக்கத்தை “பழனமருங்கணையும்” என்ற பாடலின் வழி அமைத்திருக்கிறார். இந்த அகவல் பாவின் முடிவில், இந்த நாடகம், சரபேந்திர மன்னனின் குமாரன் சிவாஜி ராஜேந்திரன் உத்தரவுப்படி அருணாசலக் கவியால் இயற்றப்பட்டது என்ற செய்தி வெளியிடப்படும்.
விநாயகர் காப்பு விருத்தமாகவும், கதாசங்கிரகம் அகவலாகவும், கட்டியங்காரன் வருகை விருத்தமாகவும் அமையும். பின்னர் சிந்து. கல்யாணி ராகத்தில் ஆதி தாளம் அமைய, பல்லவி மற்றும் சரணத்துடன் பாடல் அமையும். விநாயகர் வருகையை இந்துஸ்தானி சேர்ந்த கமாஸ் ராகத்தில் ஐங்கரர் வந்தாரே என்ற பல்லவியுடன், சங்கரி கிருபாகரி  தவத்தினால் பெற்றெடுத்த சச்சிதானந்த மய நித்யகல்யாண குண — ஐங்கரர் வந்தாரே… என்று பாடல் தொடர்கிறது.
விளையாட்டுப் பாடல்களில், நாதநாமக்கிரியை, தோடி, மோகனம், பந்துவராளி, சௌராஷ்டிரம், மத்யமாவதி, மாஞ்சி, ஆனந்தபைரவி, புன்னாகவராளி என இந்தப் பாடல்கள் அமைந்த ராகங்களின் பட்டியல் நீள்கிறது.
பாண்டிய கேளீ விலாச நாடகத்தில் பாண்டிய மன்னனொருவன் தன் மனைவியுடன் இன்ப விளையாடல் புரிவதும், ஒரு பூங்காவுக்குச் சென்று அங்குள்ள மலர்களையும் பறவைகளையும்கண்டு களிப்பதும், அப்போது இரண்டு ரத்தின வியாபாரிகள் தம்மிடம் இருந்த மணிகளையும் அணிகளையும் காட்ட, அவற்றில் விருப்பமானதை அரசன் வாங்குவதும், பூசாரிகள் பின்னர் குறி சொல்வதும் என நாடகம் எளிமையாகத் திகழ்கிறது. நாராயண கவி என்பாரின் தமிழ் இங்கே கொஞ்சி விளையாடுகிறது. இதிலும் கதாசங்கிரகம் என்ற கதை கூறல், கட்டியங்காரன் வருகை, விநாயகர் வருகை, இயற்கை வருணனை, வியாபாரிகள் வருகை, அணிகளின் அழகை வர்ணித்தல், பின்னர் பூசாரி வருதல், முருகனை வேண்டல், அன்னை மீனாட்சியை வேண்டல், குறி சொல்லல் என அனைத்துக்கும் பாடல்களும் அவற்றுக்கேற்ற ராகங்களும் அமைந்து பூரணமாய்த் திகழ்கிறது.
தற்போதெல்லாம் நாடகங்கள் நகைச்சுவையையும் டைமிங் காமெடியையும் மையமாக வைத்து உருவெடுத்துவிட்டன. நூற்றாண்டுகளுக்கு முன்னர் தமிழிசையை மையமாக வைத்துத் தோன்றிய நாடகங்கள் இன்று திரைப் படங்களாக உருமாற்றம் பெற்றுவிட்டன. இருப்பினும் தமிழிசை வளர, மீண்டும் அருணாசலக் கவிராயரையும் நந்தனாரையும், கதாபாத்திரங்கள், அவர்களுக்குள் நடக்கும் கருத்துப் பரிமாறல்கள் இவை எல்லாமும் கலந்த இது போன்ற நாடகங்களை இனியும் பாடுவது தேவை. அவை வெற்றி பெற்று, மேடைக் கச்சேரிகளில் பாடப்பட்டால் தமிழிசை ஊக்கமும் உரமும் பெறும்.    
– செங்கோட்டை ஸ்ரீராம்

(தினமணி இசை விழா மலர் 2012க்காக எழுதப்பட்ட கட்டுரை)

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Topics

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு என...

சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை

Related Articles

Popular Categories