October 9, 2024, 6:51 PM
31.3 C
Chennai

ஸ்ரீரங்கம் வெளிஆண்டாள் சந்நிதி

பலன் தரும் பரிகாரத் தலம்

விரும்பிய மணவாழ்க்கை அமைய…



கூடல்நகராம் மதுரை நகர வீதிகளில் யானை மீதேறி வலம் வந்தார் விஷ்ணு சித்தர். சித்தமெல்லாம் விஷ்ணுவையே கொண்டிருந்தார் என்றதால் அப்பெயர் அவருக்கு. இந்த கவுரவத்தை பக்தர்கள் தந்தார்கள் என்றால், பாண்டிய மன்னனும் ஒரு கவுரவத்தைத் தந்தானே! பாண்டியன் வல்லபதேவனுக்கு இருந்த சந்தேகத்தைப் போக்கி, பரதெய்வம் யாரெனக் காட்டி, அவன் வைத்திருந்த பொற்கிழியை அறுத்து வந்தவராயிற்றே! அதனால்தான் யானை மீதேறி அரச மரியாதையுடன் வலம் வரும் இந்த கவுரவம். இந்த அதிசயத்தைக்  காண மக்கள்தான் படையெடுத்து வந்தார்கள் என்றால்… அதோ பரமனும் தன் வாகனம் மீதேறி மதுரையம்பதி வருகிறாரே..! அப்படி என்றால்..?  பெரியாழ்வாரின் பக்தியைத்தான் என்னென்பது? 

கருடன் மீதேறி வந்தவன் இறைவனேயாயினும் அவன் மீதே பரிவு வந்தது ஆழ்வாருக்கு! பொங்கிப் பெருகிய பரிவாலே பட்டர்பிரானாகத் திகழ்ந்தவர் பெரியாழ்வார் ஆனார்.
பெருமானுக்கு கண்ணெச்சில் (திருஷ்டி) படக்கூடாதென தான் ஏறி அமர்ந்த பட்டத்து யானையின் கழுத்தில் இருந்த மணிகளையே வாத்தியங்களாக்கி பல்லாண்டு பாடத் தொடங்கினார்.
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்சேவடி செவ்வி திருக்காப்பு!
இவ்வாறு பல்லாண்டு பாடியவரின் மகளான ஆண்டாளுக்கு ஸ்ரீவிஷ்ணுவின் மீது ஈடுபாடு இருந்ததில் வியப்பில்லைதான். அரங்கன் அவள் மனத்தை ஆட்கொண்டான். பிருந்தாவனத்திலே ஆடிப் பாடிய கண்ணன், ஆயர்பாடியில் ஆய்ச்சியர் கை பட்டு வெண்ணெய் உண்ட வாயன் அவள் மனத்தை ஆண்டான். எந்நேரமும் சிந்தையில் எம்பெருமானையே கொண்டிருந்ததால், அவனும் ஆண்டாளுக்கு வசப்பட்டான்.
திருவில்லிபுத்தூர் வடபத்ரசாயியே பெரியாழ்வாரின் குரு, தெய்வம் எல்லாம். வடபத்ர சாயிக்காகவே மிகப்பெரிய நந்த வனம் அமைத்து பூக் கட்டி, பெருமாளுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்துவந்தார் பெரியாழ்வார். கோதையும் அந்தக் கைங்கர்யத்தில் பங்கு கொண்டாள். நூற்றியெட்டு திவ்ய தேசப் பெருமாளின் வைபவத்தையும் தந்தையிடம் கேட்டு வளர்ந்தாள் ஆண்டாள். அரங்கனின் குழல் அழகு, வாய் அழகு, கொப்பூழில் எழும் கமலப் பூவழகு மற்றும் கண்ணழகில் லயித்து வளர்ந்தாள். ‘வந்தானோ திருவரங்கன் வாரானோ என்றென்றே வளையுஞ் சோரும்’ எனும் வைராக்கியத்துடன், அரங்கனையே நினைந்து, அரங்கன் மீதே ஆசை கொண்டாள்.
தந்தை பெரியாழ்வார், பெருமாளை வாழ்த்தி பல்லாண்டு பாடினார்; மகள் கோதையோ, பெருமாளையே துயில் எழுப்பினாள். இந்த ஆளுமை குணத்தால்தான் கோதை ஆண்டாள் ஆனாள்!
ஆண்டாள் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆனாள்… எவ்வாறு? நந்தவனக் கைங்கர்யம் செய்துவந்த பெரியாழ்வார், மாலைகளைக் கட்டி வடபெருங்கோயிலுடையானுக்கு அணிவிப்பார். ஒருநாள் அவர் சூட்டிய மாலையில் நீளமான தலைமுடி! அதைக் கண்டு வருத்தமுற்ற ஆழ்வார், மறுநாள் அந்த மர்மத்தைக் கண்டறிந்தார். ஆண்டவனுக்குச் சூட்டும் மாலையினை ஆண்டாள் தான் சூடி அழகு பார்த்து, பின்னர் அதனைப் பெரியாழ்வார் சுமந்து செல்லும் பூக்கூடையில் வைத்து விடுகிறாள் என்பது கண்டு அவருக்குக் கோபம். தன் செல்ல மகள் கோதையை கோப வார்த்தைகளால் கடிந்து கொண்டார். அவ்வளவுதான்! அன்று அரங்கனின் அலங்காரத்துக்காக அவனுக்கு அணிவிக்கவேண்டிய மாலைகள் அலங்கோலமாகத் தரையில் கிடந்தன.
அன்று இரவு, பெரியாழ்வாரின் கனவிலே காட்சி தந்தான் அரங்கன். தமக்கு மாலை வராத காரணம் கேட்டான். ஆழ்வாரும், தன் செல்ல மகளின் சிறுமைச் செய்கை சொல்லி ஆறாத் துயர் கொண்டார். அரங்கன் அவரைத் தேற்றினான். “நீர் அளிக்கும் மாலைகளைக் காட்டிலும், ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலைகளே தமக்கு மிகவும் உகப்பானது” என்பதைச் சொல்லி, கோதை நாச்சியாரின் பிறப்பினைப் புரியவைத்தார். தமக்கு மகளாக வாய்த்துள்ள கோதை, மலர்மங்கையின் அவதாரம் எனக் கண்டார் பெரியாழ்வார். அவளுக்கு, ‘ஆண்டாள்’ என்றும், ‘சூடிக்கொடுத்த நாச்சியார்’ என்றும் அழைத்தார்.
மணப் பருவத்தே நின்ற பெண்ணைப் பார்த்து, பெரியாழ்வார் அவளுடைய மண வினை பற்றி பேசத் தொடங்கினார். ஆண்டாளோ, “மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்” என்று உறுதியாக உரைத்தாள். ‘‘பின் என்ன செய்யப் போகிறாய்?’’ என்று அவர் கேட்க, ‘‘யான் பெருமாளுக்கே உரியவளாக இருக்கின்றேன்’’ என்றாள்.
கோதை நாச்சியாரின் நிலை கண்டு வருந்திய ஆழ்வார், ‘நம்பெருமாள் இவளைக் கடிமணம் புரிதல் கைகூடுமோ?’ என்று எண்ணியவாறு இருந்தார். ஒரு நாள், திருவரங்கன் ஆழ்வாரது கனவில் எழுந்தருளி, “நும் திருமகளைக் கோயிலுக்கு அழைத்து வாரும். அவளை யாம் ஏற்போம்” என்று திருவாய் மலர்ந்தருளினான். அதே நேரம், கோயில் பணியாளர்கள் கனவிலும் தோன்றி, “நீவிர் குடை, கவரி, வாத்தியங்கள் முதலியன பல சிறப்புகளுடன் சென்று, பட்டர்பிரானுடன் கோதையை நம் பக்கலில் அழைத்து வருவீராக” என்று பணித்தான். மேலும் பாண்டியன் வல்லபதேவன் கனவிலும் தோன்றி, “நீ அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி நம் திருவரங்கத்துக்கு அழைத்து வருவாயாக” என்றருளினான்.
மன்னன் வல்லபதேவனும் ஏவலாளரைக் கொண்டு, விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். அரங்கன் தன் கனவில் கூறியவற்றை ஆழ்வாருக்கு உணர்த்தினான். கோயில் பரிவார மாந்தரும் பட்டநாதரை வணங்கி, இரவு தம் கனவில் திருவரங்கப்பிரான் காட்சி அளித்துச் சொன்ன செய்திகளை அறிவித்தனர்.
பட்டர்பிரான் இறைவனது அன்பை வியந்து போற்றினார். பின்னர் மறையவர் பலர் புண்ணிய நதிகளிலிருந்தும் நீர் கொண்டு வந்தார்கள். கோதையின் தோழிகள் அந்நீரினால் கோதையை நீராட்டி, பொன்னாடை உடுத்தி, பலவாறு ஒப்பனை செய்தனர். தோழியர் புடைசூழ கோதை தமக்கென அமைந்த பல்லக்கில் ஏறினார். எல்லோரும் பின்தொடர்ந்தார்கள்.
இப்படி எல்லோரும் திருவரங்கம் நோக்கிச் சென்ற காலத்தே, பலரும், “ஆண்டாள் வந்தாள்! சூடிக்கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்! கோதை வந்தாள்! திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்! பட்டர்பிரான் புதல்வி வந்தாள்! வேயர் குல விளக்கு வந்தாள்!” என்று அந்தப் பல்லக்கின் முன்னே கட்டியம் கூறிச் சென்றனர். அரசன், பெரியாழ்வார் முதலானோருடன் கோதையின் குழாம் திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தது.
பெரிய பெருமாளின் முன் மண்டபத்தை அடைந்தாள் ஆண்டாள். இதுகாறும் காணுதற்காகத் தவமாய்த் தவமிருந்த அந்தப் பெருமாளைக் கண் குளிரக் கண்டாள். அகிலத்தையே வசீகரிக்கும் அந்த அரங்கனின் அழகு, ஆண்டாளைக் கவர்ந்ததில் வியப்பொன்றும் இல்லையே! சூடிக்கொடுத்த நாச்சியாரின் சிலம்பு ஆர்த்தது. சீரார் வளை ஒலித்தது. கயல்போல் மிளிரும் கடைக்கண் பிறழ, அன்ன மென்னடை நடந்து அரங்கன் அருகில் சென்றாள். அமரரும் காணுதற்கு அரிய அரங்கனின் அருங்கண்ணைக் கண்ட அந்நொடியில், அவள் இன்பக் கடலில் ஆழ்ந்தாள். உலகளந்த உத்தமன், சீதைக்காக நடையாய் நடந்து காடு மேடெல்லாம் சுற்றித் திரிந்த அந்த ராமன், அரங்கனாய்ப் படுத்திருக்கும் அந்நிலையில், அவளுக்கு ஓர் எண்ணம் உதித்தது. சீதாபிராட்டியாகத் தான் கொடுஞ்சிறையில் தவித்தபோது, இந்த ராமன்தானே தனக்காக கல்லும் முள்ளும் பாதங்களில் தைக்க, கால் நோக நடந்து வந்து நம்மை மீட்டான். அவன் இப்போது சயனித்திருக்கிறான். அவன் கால் நோவு போக்க நாம் அவன் திருவடியை வருடி, கைமாறு செய்வோமே எனக் கருதினாள். அவனைச் சுற்றியிருந்த நாகபரியங்கத்தை மிதித்தேறினாள். நம்பெருமான் திருமேனியில் ஒன்றிப் போன அப்போதே அவள் அவன்கண் மறைந்து போனாள். அவனைவிட்டு என்றும் பிரியாதிருக்கும் வரம் கேட்டவளாயிற்றே! அரங்கன் அதை நிறைவேற்றி வைத்தான்.
காணுதற்கரிய இக்காட்சி கண்டு பிரமித்துப் போய் இருந்தார்கள் ஆழ்வாரும் மற்றவர்களும். அரங்கன் ஆட்கொண்ட அந்த ஆண்டாள் அரங்கனையே ஆண்ட அதிசயத்தைக் கண்டு எல்லோரும் பக்திப் பரவசத்தில் திளைத்திருந்தனர். அவர்களின் வியப்பை மேலும் அதிகரிக்கும் வண்ணம் திருவரங்கன் அர்ச்சக முகமாக ஆழ்வாரை அருகில் அழைத்தான். ‘கடல் மன்னனைப் போல் நீரும் நமக்கு மாமனாராகிவிட்டீர்’ என்று முகமன் கூறி, தீர்த்தம், திருப்பரிவட்டம், மாலை, திருச்சடகோபம் முதலியன வழங்கச் செய்தான்.
கருவறை விட்டு வந்த பெரியாழ்வாரை, மகளின் பிரிவு வாட்டியது. ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால், திருமகள் போல வளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டு போனாரே – என்று வாய் விட்டுக் கதறினார்.

பெரியாழ்வாரும் ஆண்டாளும் திருரங்கத்தில் வந்து இறங்கிய இடம், மேல அடையவளைஞ்சான் தெருவில், வெளி ஆண்டாள் சந்நிதியாக உள்ளது. இங்கே… அமர்ந்த திருக்கோலத்தில் (மூலவர் விக்கிரகம்) கம்பீரத்துடன் காட்சி தருகிறாள் ஆண்டாள்!
அரங்கன் – ஆண்டாள்! இருவரும் கொண்டிருக்கும் அன்புக்கு எல்லையே இல்லை. ஸ்ரீரங்கநாயகித் தாயார் மற்றும் உறையூர் கமலவல்லித் தாயார் ஆகியோருடன் அவரவர் சேர்த்தி நாளில் வருடத்துக்கு ஒருமுறைதான் மாலை மாற்றிக் கொள்கிறார் அரங்கன். ஆனால், ஆண்டாளுடன், அவளது சந்நிதி வழியே செல்லும் போதெல்லாம் மாலை மாற்றிக் கொள்கிறார்! அரங்கனை தரிசிக்க வரும்போது, இந்த வெளி ஆண்டாள் சந்நிதியில் ஆண்டாளையும் தரிசியுங்கள்! மிகுந்த வரப்பிரசாதியான இவளை வணங்கி, விரும்பிய மணவாழ்க்கை அமையப் பெற்றோர் மிக அதிகம்.

– மனத்துக்கினியான்

(தினமணி வெள்ளிமணியில் 20.07.2012 இதழில் வெளியான கட்டுரை)

author avatar
செங்கோட்டை ஸ்ரீராம்
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் | விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

Topics

பஞ்சாங்கம் – அக்.09 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனத்தில் 2,236 பேருக்கு அப்ரென்டிஸ் பணிவாய்ப்பு!

‘நிமுசுலைடு’ மாத்திரைகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க தடை!

நிமுசுலைடு (Nimesulide) என்ற மாத்திரை, கால் வலி, மூட்டு வலி, காது, மூக்கு, தொண்டை வலி, தீவிர காய்ச்சல் மற்றும் உடல் வலிக்கு தீர்வை அளித்து வருகிறது.

இந்திய விமானப் படை தினம் இன்று!

அடுத்த வரும் நான்கு ஆண்டுகளில் வானில் பறக்கும் போர் விமானங்கள் இந்திய தயாரிப்பாக இருக்கும். அல்லது இந்தியாவில் தயாரான உதிரி பாகங்களை கொண்டதாக இருக்கும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஆன்லைன் பட்டாசு வியாபாரத்தில் மோசடி: தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் சங்கம்!

சிவகாசியில் தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில தலைவர் ராஜாசந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பஞ்சாங்கம் அக்.08- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு

வான் சாகச நிகழ்ச்சி உயிரிழப்பு: திமுக அரசின் நிர்வாக சீர்கேடு என...

சாதனை படைத்த விமானப்படை நிகழ்ச்சி சோகத்தில் முடிந்தமைக்கு திமுக அரசே காரணம்!

உலகமே வியந்து பாராட்டிய சென்னை விமானப்படை சாகச நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்பாவி மக்கள் 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி கேட்டு நெஞ்சம் பொறுக்கவில்லை

Related Articles

Popular Categories